Ad Widget

சுகாதார சீர்கேடுகளுக்கு மத்தியில் கல்வியினை தொடரும் மாணவர்கள். கண்டு கொள்ளாத அதிகாரிகள்

யாழ்.திருநெல்வேலி சந்தை இறைச்சிக்கடை தொகுதி பெரும் சுகாதார சீர்கேடுகளுக்கு மத்தியில் இயங்குவதாகவும், அதனால் அப்பகுதிக்கு செல்ல முடியாத தூர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்களால் குற்றம் சாட்டப்படுகின்றது.

திருநெல்வேலி சந்தையில் ஒரு பகுதி இறைச்சிக்கடை கட்டட தொகுதியாக காணப்படுகின்றது. அந்த கட்டட தொகுதியின் கீழ் பகுதியில் மீன் சந்தையும் மேல் மாடியில் இறைச்சிக் கடை தொகுதிகளும் காணப்படுகின்றது.

குறித்த கடை தொகுதிகளில் இருந்து கழிவகற்றல் உரிய முறையில் மேற்கொள்ளததால் இறைச்சிக் கழிவுகளால் பெரும் சுகாதார சீர்கேடுகள் காணப்படுகின்றது. தூர்நாற்றமும் வீசுகின்றன.

இது தொடர்பில் நல்லூர் பிரதேச சபை செயலாளரை கேட்ட பொழுது ,

திருநெல்வேலி சந்தை பகுதியில் தினமும் இரு வேளைகளில் கழிவகற்றும் பணிகளை செய்து வருகின்றோம். காலை வேளைகளில் சந்தைக் கழிவுகளை அகற்றிய பின்னர் , சந்தைக்கு அருகில் உழவு இயந்திரத்தை நிறுத்தி வைப்போம். அதில் கழிவுகளை சேகரித்து மாலை அவற்றையும் அகற்றுவோம்.

பிரதேச சபையினால் அகற்றப்படும் கழிவுகளை கொட்டுவதற்கான உரிய இடம் இல்லாமையால் பெரும் இடர்களுக்கு மத்தியிலையே கழிவுகளை அகற்றி வருகின்றோம். என தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்கள் சுகாதார சீர்கேடுகளுக்கு மத்தியில் கல்வியினை தொடர்கின்றார்கள்.

திருநெல்வேலி சந்தைக்கு அருகாக செல்லும் பாடசாலை வீதியில் தான் சந்தைக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. அவ்வாறு சேகரிக்கப்படும் கழிவுகள் உரிய முறையில் அகற்றப்படுவதில்லை என குற்றம் சாட்டப்படுகின்றது.

திருநெல்வேலி சந்தையில் இருந்து 50 மீற்றர் தூரத்திற்கும் குறைவான தூரத்தில் பரமேஸ்வரா வித்தியாலயம் உள்ளது. இந்த பாடசாலையில் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையிலான வகுப்பு மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கையினை தொடர்கின்றார்கள்.

குறித்த ஆரம்ப பாடசாலை மாணவர்களில் பெரும்பாலானவர்கள் தினமும் சந்தைக்கு அருகில் உள்ள பாடசாலை வீதி வழியாகவே பாடசாலைக்கு செல்வார்கள்.

அவ்வேளைகளில் இந்த வீதிகளில் கழிவுகள் கொட்டப்பட்டு இருப்பதனால் தூர்நாற்றத்தின் மத்தியில் கொட்டப்பட்டு இருக்கும் கழிவுகளை கடந்து சென்றே தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்கின்றார்கள்.

அத்துடன் பாடசாலையில் கல்வி நடவடிக்கையில் மாணவர்கள் ஈடுபட்டு இருக்கும் போது இந்த கழிவுகளால் ஏற்படும் தூர்நாற்றத்தல் மாணவர்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்கொள்கின்றார்கள்.

மழை காலத்தில் அந்த வீதியினை பாவிக்க முடியாத அளவுக்கு வீதி கழிவுகளால் நிறைந்து காணப்படும் எனவும் மாணவர்கள் கல்வி நடவடிக்கையை தொடர முடியாத அளவுக்கு தூர்நாற்றம் வீசும் எனவும் குற்றம் சாட்டப்படுகின்றது.

மாணவர்களின் பெற்றோர் கல்வி அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த பாடசாலை ஆரம்ப பாடசாலை ஆகும். இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் அனைவரும் 10 வயதுக்கு உட்பட்டவர்கள். அத்துடன் நகர் புற பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்க்க வசதியற்ற பெற்றோர்களே இந்த பாடசாலையில் பிள்ளைகளை சேர்ந்து உள்ளனர்.

இந்த சந்தை நடவடிக்கை மற்றும் சந்தைக் கழிவுகள் பாடசாலை வீதியில் வைத்து சேகரிக்கப்படுவதனால் மாணவர்கள் சுகாதார சீர்கேடுகளுக்கு மத்தியில் கல்வியை தொடர்கின்றார்கள்.

இவை தொடர்பில் கல்வி அதிகாரிகள் கவனம் எடுத்து நல்லூர் பிரதேச சபையுடன் கலந்தாலோசித்து இதற்கான தீர்வினை பெற்றுகொண்டு இருக்க வேண்டும்.

ஆனால் அது தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு கல்வி அதிகாரிகள் எவரும் தயாராக இல்லை. இந்த பிரச்சனை இன்று நேற்று ஏற்பட்டது அல்ல பல வருடங்களாக இந்த பாடசாலையில் கல்வியை தொடரும் மாணவர்கள் சுகாதார சீர்கேடுகளுக்கு மத்தியிலையே கல்வியினை தொடர்கின்றார்கள்.

இந்த பாடசாலை நூற்றாண்டு பழமை வாய்ந்த பாடசாலை. தற்போது இங்கு கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்து செல்கின்றது.

இவ்வாறு சுகாதார சீர்கேடுகள் காணப்பட்டால் எந்த பெற்றோர்கள் இந்த பாடசாலையில் தமது பிள்ளைகளை சேர்பதற்கு விருப்பம் கொள்வார்கள். எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொண்டார்கள்.

நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த பாடாசாலையில் சுகாதார சீர் கேடுகள் இல்லாமல் ஆரோக்கியமான சூழலில் மாணவர்கள் கல்வியினை தொடர வழி சமைத்து கொடுக்கப்படுமா ?

Related Posts