Ad Widget

சுகாதார ஊழியர்கள் வடமாகாண முதலமைச்சரை சந்தித்தனர்

சுகாதார தொண்டர்களுக்கான நிரந்தர நியமனம் பெற்றுத்தர வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றோம். ஆனால், அதில் பல தடைகள் இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

Capture

அண்மைக்காலமாக நிரந்தர நியமனம் வழங்க கோரி சுகாதார தொண்டர்கள் வடமாகாண சுகாதார அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக இன்று வியாழக்கிழமை வடமாகாண சபையின் முன்பாக ஒன்று கூடி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து தமது நிரந்தர நியமனம் குறித்து கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

சுகாதார தொண்டர்கள் முன்வைத்த கருத்துக்களை செவிமடுத்த முதலமைச்சர், கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னர் உங்களை வேலையில் அமர்த்தும் போது, கல்வித்தகைமை, மற்றும் வயதெல்லை என எவ்வாறான விடயங்களைக் கருத்தில் கொண்டு அமர்த்தியுள்ளார்கள் என்பது பற்றி தெரியாது.

கல்வித்தகைமைகளை பற்றி யோசிக்கும் போது, வடமாகாண சபையினரால் எந்த முடிவுகளும் எடுக்க முடியாது. மத்திய அரசாங்கம் தான் பதில் தர வேண்டும்.

யுத்த காலத்தில் வடமாகாணத்தில் பல பிரச்சினைகள் இருந்த காரணத்தினால், கல்வித் தகைமைகளை கருத்தில் கொள்ளாது வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளீர்கள். அந்தவகையில், பல வருட காலங்களாக கடமையாற்றியுள்ளதால், உங்களுக்கு ஏதாவது நன்மைகள் செய்ய வேண்டுமென்று நினைக்கின்றோம்.

மத்திய அரசாங்கம் என்ன நடவடிக்கை மேற்கொள்ளுமென்று தெரியாது. ஆனாலும், உங்களுக்கான வேலைவாய்ப்பினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். வெற்றிடங்கள் எவ்வளவு இருக்கின்றது என்பது பற்றியும் பரிசீலித்துப் பார்க்க வேண்டும்.

சுகாதார அமைச்சில் வெற்றிடங்கள் இருக்கின்றனவா அல்லது வேறு திணைக்களங்களில் வெற்றிடங்கள் இருக்கின்றனவா என்றும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதேநேரம், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் சுகாதார ஊழியர்களின் நிரந்தர நியமனத்தின் பிரச்சினைகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.

இவ்வாறு பலவிதமான பிரச்சினைகள் இருக்கின்றன. சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடியும், மத்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடியும் நிரந்தர நியமனம் வழங்குவது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் முதலமைச்சர் கூறினார்.

நிரந்தர நியமனம் பெற்றுத்தர வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றோம். ஆனால், அந்த நிரந்தர நியமனத்தினைப் பெற்றுக்கொள்வதில் பல தடைகள் இருக்கின்றன.

அந்தவகையில், சுகாதார அமைச்சருடன் பேசி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் அந்த நடவடிக்கையினை எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் முதலமைச்சர் மேலும் கூறினார்.

Related Posts