Ad Widget

சீனாவிலும் ஸிக்கா வைரஸ்!

சீனாவில் ஒருவருக்கு ஸிக்கா வைரஸ் தாக்கியிருப்பது அண்மையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி 28 ஆம் திகதி வெனிசூலாவில் இருந்து நாடு திரும்பிய சீனாவை சேர்ந்த 34 வயதான ஒருவர் கடும் காய்ச்சல், தலைவலி, போன்றவற்றால் அவதிப்பட்டார். சீனாவின் சியான்க்ஸி மாகாணத்தில் உள்ள கான்க்ஸின் பகுதியை சேர்ந்த இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இதில் இவருக்கு ஸிக்கா வைரஸ் தாக்கியிருப்பது தெரியவந்தது.

சிகிச்சைக்கு பிறகு தற்போது சராசரி மனிதன் உடல் வெப்ப நிலைக்கு அவரது உடலின் வெப்ப நிலை மீண்டு வருவதாகவும் தோல் பகுதிகளின் வெடிப்பு மறைந்து வருகிறது எனவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக சீனாவின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெனிசூலாவில் இருந்து சீனாவிற்கு ஹாங்காங் ஷென்சங் வழியாக அவர் வந்துள்ளார். ஸிக்கா வைரஸ் அறிகுறி ஏற்பட்டதையடுத்து பெப்ரவரி 5 ஆம் திகதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் மூலமாக ஸிக்கா வைரஸ் பரவும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகை மிரட்டி வரும் ஸிக்கா வைரஸ் பாதிப்பு தற்போது 26 நாடுகளில் காணப்படுகிறது. இதில் பிரேசில்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 20,000 இற்கும் மேற்பட்டோர் ஸிக்கா வைரஸ் தொற்றுக்குள்ளகியுள்ளனர். இவர்களில் 2,000 பேர் பெண்கள் ஆவர்.

Related Posts