Ad Widget

சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடு ஒருபோதும் வேண்டாம்!

சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீட்டை வன்மையாகக் கண்டித்துள்ள வடக்கு மாகாண சபை, இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில், பொது முக்கியத்துவம் வாய்ந்த அவசர பிரேரணை ஆளும் கட்சி உறுப்பினர் து.ரவிகரனினால் சமர்ப்பிக்கப்பட்டது. பிரேரணையைச் சமர்ப்பித்து உரையாற்றிய ரவிகரன், “இறுதியாக நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் வெளிமாவட்ட மீளவர்கள் முல்லைத்தீவு கடற்கரையில் அனுமதியின்றி தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இதனடிப்படையில் அரச அதிபரின் பணிப்பின்படி கிராம அலுவலகர்களுக்கு தெரியாமல் கடல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் வெளிமாவட்ட மீனவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

கொக்குத்தொடுவாய் வடக்கு கிரம அலுவலகர் பிரிவில், புலிபாய்ந்த கல் அருகாமையில் இவ்வாறு அத்துமீறி குடியேறி கடல்தொழிலில் ஈடுபட்ட தென்னிலங்கை மீனவர்கள் தொடர்பான தகவல் சேகரிக்கச் சென்ற கிராம அலுவலகர் சீவரட்ணம் யேசுரட்ணம், அத்துமீறி கடல் தொழிலில் ஈடுபடும் வெளிமாவட்ட மீனவர்களால் தாக்கப்பட்டார்.

பின்னர் இந்த மீனவர்களால் தொலைபேசி மூலம் தகவல் அனுப்பப்பட்டு 593 ஆவது படைப்பிரிவின் கேணல் சமந்த சில்வா உட்பட இராணுவத்தினர் சிலர் அங்கு வருகை தந்துள்ளனர். கேணல் சமந்த சில்வா கிராம அலுவலரின் தேசிய அடையாள அட்டை மற்றும் உத்தியோக அடையாள அட்டை என்பவற்றை பறிமுதல் செய்து அவரை மரியாதைக் குறைவாகத் திட்டியுள்ளார். இது என்ன? சிவில் நிர்வாகமா? அல்லது இராணுவ ஆட்சியா? நடக்கின்றது. பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை தெரிவிப்பதோடு, இராணுவ – கடற்படையின் ஒத்துழைப்புடன் அரங்கேற்றிவரும் இப்படியான சட்டம் ஒழுங்கு சீர்குலைவை மாவட்டத்தின் மக்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்.

அவர்கள் பிழை செய்தால் குற்றமில்லை நாங்கள் பிழை செய்யாமலே குற்றவாளிகள் ஆக்கப்படுகின்றோம். இப்படியான அராஜகங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று நல்லாட்சி அரசுக்கு தெரிவிக்கின்றேன்” – என்றார். இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த ஆளும் கட்சி உறுப்பினர்களும், சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத் தலையீட்டை வன்மையாகக் கண்டித்து கருத்துத் தெரிவித்தனர். இறுதியில் இந்தப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரேரணை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Related Posts