Ad Widget

சிவாஜிலிங்கத்தின் செயல் கோமாளித்தனமானது – சி.வி.கே

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் குருநாகல் தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியிடுவது கோமாளித்தனமான செயல் என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

சிவாஜிலிங்கம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றமை மற்றும் வியாழக்கிழமை (23) நடைபெற்ற வடமாகாண சபை அமர்வில் கலந்து கொண்டமை தொடர்பில் அவைத்தலைவரிடம் விளக்கம் கேட்டவேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் தொடர்ந்து கூறுகையில்,

‘எவ்வித காரணங்கள் மற்றும் தொடர்புகளும் இல்லாமல் சிவாஜிலிங்கம் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றமை கோமாளித்தனமாகவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுகின்ற குருநாகல் மாவட்டத்தில் சிவாஜி போட்டியிடுவது, மஹிந்தவின் வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது.

தன்னை எதிர்த்து விடுதலைப் புலிகளின் தலைவரின் உறவினர் ஒருவர் போட்டியிடுகின்றார் என மஹிந்த தனது தேர்தல் பிரசார நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார். இது மஹிந்தவின் வெற்றிவாய்ப்பை அதிகரித்துள்ளது. இதனால், சிவாஜிலிங்கத்துக்கும் தமிழ் மக்களுக்கும் எவ்வித நன்மைகளும் கிடைக்கப்போவதில்லை.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒருவர் வடமாகாண சபை அமர்வில் கலந்துகொள்ள முடியாது என தேர்தல் ஆணையாளரால் அறிவுறுத்தப்பட்டும், சிவாஜிலிங்கம் சபைக்கு சமூகமளித்திருந்தார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஏனைய மாகாண உறுப்பினர்கள் விடுமுறையில் உள்ளனர். சிவாஜிலிங்கம் மாத்திரம் விடுமுறை கேட்கவில்லை என அவைத்தலைவர் தெரிவித்தார்.

கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையின் வியாழக்கிழமை (23) நடைபெற்ற வடமாகாண சபை அமர்வில் கலந்துகொண்ட சிவாஜிலிங்கத்துக்கு பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்படமாட்டாது என அவைத்தலைவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் சபையில் குழப்ப நிலையேற்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒருவர் மாகாண சபை அமர்வில் கலந்துகொள்ள முடியாது என்ற சட்டவிதிக்கு மாறாக சிவாஜிலிங்கம் அமர்வில் கலந்துகொண்டமையையும், சபையில் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பத்தை அளிக்கமுடியாது என்பதையும் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related Posts