Ad Widget

சிவாஜிலிங்கத்தின் கேக்கை பறிமுதல் செய்த பொலிஸார்!!

தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது வல்வெட்டித்துறை இல்ல வளவில் கேக் வெட்டுவதற்காகச் சென்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பொலிஸாரால் தடுக்கப்பட்டார்.

அவரை அந்தப் பகுதியிலிருந்து அழைத்துச் சென்ற பொலிஸார், சிறிது தூரத்துக்கப்பால் விடுவித்ததுடன், அவரிடமிருந்த கேக்கையும் பறிமுதல் செய்தனர்.

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு, வல்வெட்டித்துறையில் உள்ள அவரது வீட்டு காணியை துப்பரவு செய்த நான்கு இளைஞர்கள் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

தலைவர் வே.பிரபாகரனின் 64ஆவது பிறந்த நாள் இன்றாகும். அவரது பிறந்த நாளை தாயகத் தமிழர்கள் மட்டுமல்லாமல் உலகு வாழ் தமிழர்கள் கொண்டாடுகின்றனர்.

இந்த நிலையில் அவரது வீட்டு வளாகத்தைத் துப்புரவு செய்த்நான்கு இளைஞர்களிடம் அடையாள அட்டைகளைப் பறிமுதல் செய்த வல்வெட்டித்துறை பொலிஸார், அவர்களை பொலிஸ் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.

அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் வீடு அமைந்திருந்த பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

வரலாற்றுச் சின்னமாக தென்னிலங்கை மக்களால் கருதப்பட்ட தலைவர் பிரபாகரனின் வீடு இராணுவத்தினரால் முற்றாக இடித்தழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வருடங்களாக தலைவர் பிரபாகரனின் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் இந்த வருடம் பொலிஸாரின் கெடி பிடிகள் அதிகரித்துள்ளன.

மாவீரர் நாள் நிகழ்வுகள் நாளை கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில் பொலஸார் இன்றே தமது கெடிபிடிகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Posts