Ad Widget

சிலர் சமஷ்டி என்றால் பிரிவினை என்பதால்தான் பிரச்சினை

ஒரு அமைச்சர் என்ற முறையில் உயர்ஸ்தானத்தை வகிக்கும் சுவிடன் வௌிவிவகார அமைச்சர் இங்கு வந்தது எமக்கு பெருமை என வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

sweedan-cm

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுவிடன் வௌிவிவகார அமைச்சர் நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்தார்.

இங்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட வட மாகாண முதலமைச்சர், நீங்கள் மத்திய வருமானம் பெறும் நாடு என்ற ரீதியில் எங்களால் எந்த நன்மையும் செய்ய முடியாதுள்ளது என, சுவிடன் வௌிவிவகார அமைச்சர் குறிப்பிட்டதாக தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த போது, நாடு என்ற ரீதியில் நாம் மத்திய வருமானம் பெறுகிறோம்.. ஆனால் வட மாகாணத்தைப் பொறுத்தவரை நாங்கள் பின்தங்கியே உள்ளோம், குறைந்த வருமானத்தையே பெறுகிறோம், உங்கள் உதவி எமக்குத் தேவை என தான் கூறியதாக விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வடக்கு முதல்வர் மேலும் கூறியதாவது,

“சிறிது சிறிதாக.. மெல்ல மெல்ல.. மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருப்பதை அவர் (சுவிடன் வௌிவிவகார அமைச்சர்) குறிப்பிட்டு காட்டினார் நானும் அதனை ஏற்றுக் கொண்டேன்.. வருங்காலத்தில் எத்தகைய மாற்றத்தை எதிர்பார்க்கிறீர்கள் என அவர் கேட்டார், அதற்கு அரசியல் ரீதியாக ஒரு தீர்வை காணவேண்டிய அவசியத்தை நான் குறிப்பிட்டேன்

எப்படிப்பட்ட தீர்வை எதிர்பார்கிறீர்கள் என்று கேட்டபோது, சமஷ்டி குறித்து பல விடயங்களை கலந்து ஆலோசித்து நாங்கள் எத்தனையோ வருடங்களாக கோரிய சமஷ்டி முறை சரியானது என அறிந்து தெரிந்து அதற்கு ஏற்ப எமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம் என்றேன்.

அதை அவர் ஏற்றுக் கொண்டார், ஆனால் பெரும்பான்மையினர் சமஷ்டி முறையை ஏற்றுக் கொள்ளவில்லை போல தோன்றுகிறதே என அவர் கூறினார்.

அதற்கு நான் அது உண்மை அரசியல்வாதிகள் சமஷ்டியை பிரிவினைக்கு ஒப்பாக இதுவரை கூறியதால் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளது என்றும், நாட்டைப் பிரிக்காது ஒருமித்து வைத்திருக்க நாம் சமஷ்டியை கோரும் போது, சமஷ்டி என்றால் பிரிவினை என சிலர் கூறுவதால் எமக்கு ஒரு பிரச்சினை ஏற்படுகிறது என்றேன்.

கடைசியாக வௌிநாட்டு அரசாங்கங்கள் என்ற ரீதியில் எமது பங்கு என்ன என கேட்டார்.

நான் சொன்னேன் வௌிநாட்டு அரசாங்களின் பங்கு இல்லாவிடில் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற முறையில் எமது பாதிப்பு இன்னும் கூடிக் கொண்டே போகும் என்றேன்.

எதிர்வரும் ஜூன் மாதத்தில் வாய்மொழி மூலமாக சில சமர்ப்பணங்களை அவர்கள் செய்ய வேண்டியுள்ளது. அத்துடன் மார்ச் மாதம் எழுத்து மூலம் செய்ய வேண்டியுள்ளது, அதற்காக அரசாங்கம் பலவிதங்களில் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும், அதை அவர்கள் நெருக்குதல் காரணமாகவே செய்வதாக நாம் புரிந்து கொண்டுள்ளோம் எனவும் நான் கூறினேன்.

எனவே வௌிநாட்டு அரசாங்கங்களில் நெருக்குதல், நல்லெண்ணம், அறிவுரை எமக்கு நன்மை பயக்கும் என்ற கருத்தை நான் அவருக்கு குறிப்பிட்டேன் என்றார்.

Related Posts