Ad Widget

சிறைக்கைதிகளுக்கு தொலைபேசி வசதி

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு தொலைபேசி வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம், செவ்வாய்க்கிழமை(30) தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த நடிவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கென தயாரிக்கப்படும் விசேட பெட்டியொன்றில் நிறுவப்படும் தொலைபேசி இணைப்புக்களில், சிறையிலுள்ள கைதியொருவர், மாதமொன்றிற்கு 5 நிமிடங்களை கொண்ட இரண்டு அழைப்புக்களை மேற்கொள்ள முடியும் என சிறைச்சாலைகள் ஊடகபேச்சாளர் டி.என்.உப்புல்தெனிய கூறினார்.

முதற்கட்டமாக இந்த தொலைபேசி திட்டமானது வெலிக்கடை சிறைச்சாலையில் நிறுவப்படவுள்ளது.

இதன் மூலம் சிறைக்கைதிகள், தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தமது வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ள முடியும்.

இதற்காக குடும்ப உறுப்பினர்களின் 4 தொலைபேசி இலக்கங்கள் உள்ளடங்களாக 5 தொலைபேசி இலக்கங்கள் பதிவுசெய்யப்படுவதுடன் அந்த இலக்கங்களை சிறைச்சாலை புலனாய்வு பிரிவினர் ஆய்வு செய்து ஒப்புதல் அளிப்பர்.

சிறைக்கைதி தமது கைவிரல் அடையாளத்தை பதிவு செய்யும் போது அவருக்கு அனுமதியளிக்கப்பட்ட 5 தொலைபேசி இலக்கங்கள் திரையில் தோன்றும். அதன்போது அவர் கதைப்பதற்கு விரும்பும் ஒரு தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்த முடியும் இந்த அழைப்பானது 5 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்படும்

இதற்காக, குறித்த சிறைக்கைதியின் குடும்ப அங்கத்தவர்கள், சிறைக்கைதியின் தொலைபேசி கணக்கிற்கு மீள்நிரப்பு செய்ய வேண்டும் என்பதுடன் அதன் பின்னரே கைதி, தொலைபேசி அழைப்பினை மேற்கொள்ள முடியும்.

இதேவேளை, மரணதண்டனை கைதிகளுக்கும் இந்த தொலைபேசி வசதியினை ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் உப்புல்தெனிய கூறினார்.

Related Posts