Ad Widget

சிறுவர்கள், கர்ப்பிணிகளுக்கு சுகாதார தரப்பு எச்சரிக்கை!!

இலங்கையில் நிலவும் அதீத வெப்பநிலை காரணமாக சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள், நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் ஆகியோர் நீரிழப்பு அபாயத்தில் உள்ளதாக, இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர், வைத்தியர் வின்யா ஆரியரத்ன தெரிவித்தார்.

ஆகையினால், ஆபத்திலுள்ளவர்கள் சூரிய ஒளியில் நடமாடுவதை கட்டுப்படுத்த வேண்டுமென்பதுடன், நீரிழப்பைத் தவிர்க்க போதியளவு நீர் அருந்த வேண்டுமெனவும், அவர் தெரிவித்தார். வயது வந்த ஒருவர் குறைந்தது 2.5 லீற்றர் நீர் அருந்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களை வெளிப்புற நடவடிக்கைகளிலிருந்து குறிப்பாக, அத்தியாவசியமற்ற வெளிப்புற செயல்பாடுகளிலிருந்து விலக்கி வைக்குமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.

சிறுவர்கள் வீட்டுக்குள் அல்லது நிழலில் விளையாடுவதற்கு இடம் வழங்கப்பட வேண்டும். வெளியில் செல்லும்போது பாதுகாப்பு தொப்பிகளை அணியுமாறு சிறுவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டுமெனவும், அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தங்கள் ஊழியர்களின் தேவைகளை தொழில் வழங்குநர்கள் கவனிக்க வேண்டும். தேவைப்பட்டால் வேலை நேர அட்டவணைகளை மாற்ற வேண்டுமெனவும், அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை அடுத்த சில நாட்களுக்கு தொடருமென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Posts