Ad Widget

சிறுவர்களை உயிரோடு புதைத்த ஐ.எஸ். தீவிரவாதிகள்

அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தில் இருந்து பிரிந்த ஒரு தீவிரவாத குழு, இஸ்லாமிய நாட்டை உருவாக்கி இருப்பதாக கூறி ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் ஒரு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.

iraq

ஐ.எஸ்.தீவிரவாதிகள் என்றழைக்கப்படும் இந்த தீவிரவாத குழு ஈவு, இரக்கமற்ற அட்டூழிய செயல்களைத் தொடர்ந்து செய்து வருகிறது. சமீபத்தில் பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்த ஜோர்டான் நாட்டு விமானியை கூண்டுக்குள் அடைத்து உயிரோடு தீ வைத்து எரித்து கொன்று நெஞ்சை பதற வைக்கும் கொடூரத்தை ஐ.எஸ்.தீவிரவாதிகள் செய்தனர்.

இந்த நிலையில் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் மற்றொரு வெறிச்செயலை ஐ.நா. சபையின் கண்காணிப்புக்குழு வெளியிட்டுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் ஒரு பகுதியை ஆக்கிரமித்த போது ஏராளமான சிறுவர், சிறுமிகளை ஐ.எஸ்.தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

அவர்களில் சிறுவர்களை அவர்கள் அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்தனர். அதில் பல சிறுவர்கள் உயிரிழந்தனர். மற்ற சிறுவர்களை பெரிய குழி தோண்டி ஐ.எஸ்.தீவிரவாதிகள் உயிரோடு, புதைத்து கொன்று விட்டதாக ஐ.நா. கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது.

பிணைக் கைதியாக பிடித்த இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளை ஐ.எஸ்.தீவிரவாதிகள் இன்னமும் தங்கள் பகுதிகளில் அடிமைகள் போல வைத்துள்ளார்களாம். அவர்களை தீவிரவாதிகள் தினம், தினம் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக ஐ.நா.சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.

இஸ்லாமியர்களில் உள்ள ஒரு சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் இத்தகைய வெறிச் செயல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பிணைக்கைதியாக பிடிபட்ட பல இளைஞர்களை ஐ.எஸ்.தீவிரவாதிகள் மிரட்டி அச்சுறுத்தி தற்கொலை தாக்குதல் நடத்த பயன்படுத்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

இது தவிர தங்களுக்கு எதிராக போரிடும் ராணுவத்தை சமாளிக்க பிணைக்கைதிகளாக உள்ள அப்பாவி சிறுவர்களை மனித கேடயமாகவும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் பயன்படுத்தி வரும் தகவலை ஐ.நா.சபை கண்காணிப்புக்குழு வெளியிட்டுள்ளது.

Related Posts