Ad Widget

சிறுவனுக்கு மரண தண்டனை; ஜனாதிபதியிடம் கேட்கப் பணிப்பு

சிறுவனாக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட மனிதப் படுகொலை தொடர்பில், அச்சிறுவனுக்குத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மரண தண்டனை குறித்து, சரியான தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரும்படி, மேன்முறையீட்டு நீதிமன்றம் பணித்துள்ளது.

சிறைச்சாலைகள் பணிப்பாளர் நாயகத்துக்கே, மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கண்டவாறு, திங்கட்கிழமை (12) பணித்துள்ளது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால், தீர்ப்பளிக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புத் தொடர்பான, மேன்முறையீட்டு மனுவைப் பரிசீலனைக்கு உட்படுத்தியபோதே, நீதிமன்றம் மேற்கண்டவாறு பணித்தது.

இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான தீபாலி விஜேசுந்தர மற்றும் லலித் ஜயசூரிய ஆகிய நீதியரசர் குழாம் முன்னிலையிலேயே பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இதன்போது மன்றில் ஆஜராகியிருந்த, சட்டத்தரணி நிமல் முத்துகுமாரண, சிறுவர் பராயத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த மனிதப் படுகொலைக்கு, மரண தண்டனை விதிக்க முடியாது என்று, தண்டனைக் கோவைச் சட்டத்தின் உறுப்புரையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்தே, நீதியரசர் குழாம் மேற்கண்டவாறு கட்டளையிட்டு, பணித்துள்ளது.
மனித படுகொலை வழக்கில், மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு, சிறைச்சாலையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள பொன்னம்பலம் கோணேஸ்வரன் தொடர்பிலேயே தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரும்படி மேன்முறையீட்டு நீதிமன்றம் பணித்துள்ளது.

இந்த மேன்முறையீட்டு மனு, பொன்னம்பலம் கோணேஸ்வரனினால், சட்டத்தரணி நிமல் முத்துகுமாரண ஊடாக தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், சட்ட மா அதிபர், பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டிருந்தார்.

தனது தரப்பைச் சேர்ந்த பொன்னம்பலம் கோணேஸ்வரன், 1999 பெப்ரவரி 08 ஆம் திகதியன்று, யாழ்ப்பாணத்தில் யோஷன் பிரியதர்ஷினி என்பவரை கொலை செய்தாக, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், அச்சிறுவனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

குற்றம் இடம்பெற்றபோது, எனது தரப்பைச் சேர்ந்தவருக்கு 18 வயதாகவே இருந்தது. 18 வயதுக்கும் குறைந்த சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது என்று தண்டனைக் கோவைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் நீதிபதியினால், தன்னுடைய தரப்பைச் சேர்ந்த பொன்னம்பலம் கோணேஸ்வரனுக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட தீர்ப்பும் பிழையானது என்றும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

ஆகையால், யாழ்ப்பாணம் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பை இரத்துச் செய்து, தன்னுடைய தரப்பைச் சேர்ந்தவரை விடுதலைச் செய்யுமாறும் அவர், நீதிமன்றத்தில் கோரிநின்றார்.

முன்வைக்கப்பட்ட வாதங்களை கவனத்தில் எடுத்த நீதியரசர் குழாம், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியினால் விதிக்கப்பட்ட தீர்ப்பில் குறைப்பாடுகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டி, இந்த மரண தண்டனை தீர்ப்பு குறித்து, சரியான தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோருமாறு பணித்துள்ளது.

Related Posts