Ad Widget

சிறுமி மீதான துஷ்பிரயோகம்: எதிரிக்கு 27 வருட கடூழிய சிறைத்தண்டனை

வவுனியா போகஸ்வெல பிரதேசத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவருக்கு, வவுனியா மேல் நீதிமன்றம் 27 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக, மதவாச்சி மாமா என அழைக்கப்படும் முத்துபண்டாகே செனரத் அநுர சாந்த சரத்குமார என்பவருக்கு, நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் நேற்று (செவ்வாய்க்கிழமை) இத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

சிறுமியை கடத்தியமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம், இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

16 வயதிலும் குறைந்த பெண் பிள்ளையை, சட்ட ரீதியான பாதுகாவலரிடமிருந்து கடத்திய குற்றச்சாட்டுக்காக அதிகபட்ச தண்டனையாக 7 வருட கடூழிய சிறைத்தண்டனையும், பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்கு அதிக பட்ச தண்டனையாக 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

அத்தோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் ரூபாய் நட்டஈட்டினை செலுத்துமாறும், அதனை செலுத்த தவறும் பட்சத்தில் 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. அத்தோடு, தண்டப்பணமாக பத்தாயிரம் ரூபாய் செலுத்தப்பட வேண்டுமென்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Related Posts