Ad Widget

சிறுமியை தாயாக்கிய வயோதிபர் உயிரிழப்பு

பாடசாலை மாணவியொருவரை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி, அவரை ஒரு பெண் குழந்தைக்குத் தாயாக்கிய குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தால் 10 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கந்தையா சித்திவிநாயகம் (வயது 69) என்ற வயோதிபர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை (01) உயிரிழந்தார்.

நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கரணவாய் மூத்தநாயனார் கோவிலடியைச் சேர்ந்த 14 வயதான மாணவியை 2009ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி அன்று, கந்தையா சித்திவிநாயகம் (வயது 69) என்ற மேற்படி வயோதிபர், கடத்திச் சென்று வன்புணர்வுக்குட்படுத்தினார். இதன்மூலம் அந்தச் சிறுமி ஒரு பெண் குழந்தைக்கு தாயானார்.

கைது செய்யப்பட்ட வயோதிபருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று, மரபணுப் பரிசோதனை அறிக்கை மூலம் வயோதிபர் குற்றவாளியென்பது நிருபணமாகியது.

வழக்கின் தீர்ப்பு கடந்த 14ஆம் திகதி வழங்கப்படவிருந்த தருணத்தில், குற்றஞ்சாட்டப்பட்ட வயோதிபர் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அன்றைய தினம் அவருக்கு வழங்கப்படவிருந்த கடந்த தீர்ப்பை 16ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். எனினும், அன்றைய தினமும் வயோதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமையால் தீர்ப்பை கடந்த 30ஆம் திகதி வரையில் ஒத்திவைத்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் வைத்தியசாலையில் இருந்தமையால், சட்ட வரையறைக்குட்பட்டு, அன்றைய தினம் தீர்ப்பு வழங்குவதாக கூறிய மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், 10 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது குழந்தைக்கும் 20 இலட்சம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறும் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts