Ad Widget

சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்தி அலைபேசியில் படம் பிடித்த இருவர் கைது!!!

சிறுமி ஒருவரை அழைத்துச் சென்று வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவர் கோண்டாவிலில் இரும்பக உரிமையாளரின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர்களது குருதி மாதிரிகளைப் பெற்று கொலை வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி வழங்க பொலிஸார் முன்வைத்த விண்ணப்பத்துக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

நண்பருடன் இருந்த சிறுமியை கடத்திச் சென்று வன்புணர்வுக்குட்படுத்தி அதனை தமது அலைபேசியில் ஒளிப்படம் எடுத்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர்கள் இருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் கொலை, கொள்ளை உள்ளிட்ட மேலும் மூன்று வழக்குகளில் பொலிஸாரால் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சிறுமியை கடத்திச் சென்று வன்புணர்ந்த சம்பவம் கோப்பாய், இருபாலையில் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

கோப்பாய் இருபாலையில் ஒழுங்கை ஒன்றில் நின்று 14 வயதுச் சிறுமியும் அவரது நண்பரும் கதைத்துக் கொண்டிருந்த போது, அந்த வழியால் வந்த இருவர், அவர்களை மிரட்டியுள்ளனர்.

மதுபோதையில் இருந்த அந்த நபர்கள் இருவரும் சிறுமியின் நண்பரைத் தாக்கி அவரை அங்கிருந்து துரத்திவிட்டு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர்.

சிறுமியை ஒதுக்குப் புறம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று சித்திரவதை செய்து வன்புணர்வுக்குட்படுத்தியுள்ளனர். அதுதொடர்பான ஒளிப்படங்களையும் அவர்கள் தமது அலைபேசியில் பதவிவிட்டுள்ளனர்.

வீடு திரும்பிய சிறுமி, சம்பவம் தொடர்பில் தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியும் தாயாரும் ஒரு வாரத்தின் பின்னர் கடந்த 23ஆம் திகதி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.

சிறுமியின் நண்பரை அழைத்து விசாரணை செய்த பொலிஸார், அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரைக் கைது செய்தனர்.

உரும்பிராயைச் சேர்ந்த சிவலிங்கம் விஜிதரன் அல்லது குட்டி (இவரது மற்றொரு முகவரி கிளாலி வீதி எழுதுமட்டுவாழ்) இருபாலையைச் சேர்ந்த சற்குணம் ஜெம்சன் ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடந்த 25ஆம் திகதி முற்படுத்தப்பட்டனர்.

சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் பி அறிக்கை தாக்கல் செய்திருந்த பொலிஸார், சந்தேகநபர்கள் இருவரையும் அடையாள அணிவகுப்புக்கு உள்படுத்தவேண்டும் என்று விண்ணப்பம் செய்தனர்.

வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், சந்தேகநபர்கள் இருவரையும் வரும் 10ஆம் திகதி அடையாள அணிவகுப்பு உள்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி அன்றுவரை விளக்கமறியல் வைக்க உத்தரவிட்டார்.

அதனையடுத்து சந்தேகநபர்கள் இருவரையும் மூன்று வெவ்வேறு வழக்குகளில் பொலிஸார் முற்படுத்தினர்.

கோண்டாவில் உப்புமடச் சந்தி இரும்பக உரிமையாளர் கொலை, கொள்ளைச் சம்பவம் மற்றும் சொத்துக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட ஏற்கனவே உள்ள வழக்குகளிலேயே சந்தேகநபர்கள் இருவரும் முற்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்களுக்கும் கொலைக்கு தொடர்பு இருபதாக சான்று ஆதாரங்கள் உள்ளனவா? என்று பொலிஸாரிடம் மன்று கேள்வி எழுப்பியது.

கொலைச் சம்பவம் இடம்பெற்ற அன்று சந்தேகநபர்கள் இருவரும் அங்கு நின்றனர் என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.

அத்துடன், கொலைச் சம்பவ இடத்தில் பெறப்பட்ட குருதி மாதிரிகளுடன் சந்தேநபர்களின் குருதி மாதிரிகள் ஒத்துச் செல்கின்றவா என்று விசாரணைகளை முன்னெடுக்க அவர்களது குருதி மாதிரிகளைப் பெற்றுக்கொள்ள பொலிஸார் மன்றில் விண்ணப்பம் செய்தனர்.

அதற்கு அனுமதியளித்த மேலதிக நீதிவான், கொலை வழக்கு உள்ளிட்ட 3 வழக்குகளிலும் சந்தேகநபர்கள் மூவரையும் வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியில் வைக்க உத்தரவிட்டார்.

Related Posts