Ad Widget

சிறுப்பிட்டி கொலை வழக்கு ஐந்து இராணுவத்தினருக்கு பிணை!

சிறுப்பிட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 14 இராணுவத்தினரில் ஐவருக்கு நேற்றையதினம் யாழ். மேல் நீதிமன்றம் பிணை வழங்கியது.

1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் திகதி இரு இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இதனுடன் தொடர்புபட்டதாக குற்றஞ் சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரை அச்சுவேலி காவல்துறையினர் கைது செய்தனர்.

எனினும் 1998ம் ஆண்டு நீதவான் நீதிமன்றம் குறித்த நபர்களுக்கு பிணை வழங்கியது. இதனைத்தொடர்ந்து கிடப்பில் போடப்பட்ட வழக்கு கடந்த வருடம் சட்டமா அதிபரினால் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டது.

குற்றம் சாட்டப்படட 16 இராணுவத்தினரில் இருவர் யுத்தத்தில் உயிரிழந்தனர். இந்நிலையில் வழக்கு விசாரணை யாழ். நீதவான் சதீஸ்கரனின் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த 14 இராணுவத்தினரினதும் பிணை நிராகரிக்கப்பட்டு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்படும் இராணுவ வீரர்களுக்கு பிணை வழங்கக்கோரி யாழ். மேல் நீதிமன்றில் பிணை மனு விண்ணப்பிக்கப்பட்டது.

இதன்போது சந்தேக நபர் சார்பாக முன்னிலையாகிய சட்டத்தரணி குறித்த இராணுவ வீரர்களுக்கு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கிய நிலையில் அவர்களை தற்போதைய நீதவான் மீண்டும் விளக்கமறியலில் வைப்பது ஒழுங்கல்ல எனவும், குறித்த குற்றச்செயல்களுக்கு எவ்வித சாட்சியங்களும் இல்லை எனவும், சந்தேக நபர்களும் எவ்வித விசாரணைகளுமின்றி தொடர்ந்து விளக்கமறியலில் வைத்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

எனினும் குறித்த பிணை மனு குறித்து சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையாகிய அரச சட்டத்தரணி நிசாந் சந்தேக நபர் 14 பேரையும் பிணையில் விடுவிப்பதிற்கு கடும் ஆட்சபனையை தெரிவித்தார். மேலும் குறித்த வழக்கில் சுருக்க விசாரணைகள் இன்னும் ஆரம்பிக்கவில்லை இந்நிலையில் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவது விசாரணைகளை பாதிக்கும் எனவும், தெரிவித்ததுடன் சந்தேக நபர்களான 14 பேரில் 2 ஆம் 3 ஆம் , 4 ஆம், 13 ஆம், 14 ஆம் எதிரிகளுக்கு பிணை வழங்கலாம் மிகுதிப்பேர்கள் வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக காணப்படுகின்றனர் என தெரிவித்தார்.

இதனடிப்படையில் நீதிபதி இளஞ்செழியன் 2 ஆம் 3 ஆம், 4 ஆம், 13 ஆம், 14 ஆம் எதிரிகளுக்கு பிணை வழங்கியதோடு மிகுதி 9 இராணுவத்தினரதும் பிணை மனு மன்றினால் நிராகரிக்கப்படுவதாக உத்தரவிட்டார்.

Related Posts