Ad Widget

சிறுபான்மையினருக்கு இலங்கையில் உரிய இடமில்லை: ஐ.நா.

இலங்கையில் சிறுபான்மை சமூகத்திற்கு உரிய இடமில்லை என்பது தெளிவாக தெரிவதாக, ஐ.நா.வின் சிறுபான்மை விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் ரீட்டா இஷாக் தெரிவித்துள்ளார்.

un-special-reporter-met-tna

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐ.நா. அறிக்கையாளர், நேற்று (புதன்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து கலந்துரையாடியபோது இவ்வாறு தெரிவித்ததாக, கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பு குறித்து சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில்-

”இலங்கையில் வாழும் சிறுபான்மை சமூகங்களுக்கு தேசிய வாழ்க்கையில் சரியான இடம் கொடுக்கப்படவில்லையென்பது தெளிவாக தெரிவதாக ரிட்டா இஷாக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் பல இடங்களுக்குச் சென்று அவர் மக்களின் நிலை குறித்து ஆராய்ந்துள்ளார்.

அந்தவகையில் இந்நாட்டின் இராணுவம் ஓர் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், சமாதானம், சகவாழ்வு, சம உரித்து என்பன அனைவருக்கும் இருப்பதாக சொல்ல முடியாதென எம்மிடம் குறிப்பிட்டார். மக்களின் இன விகிதாசாரத்தின் அடிப்படையில் நாட்டின் படைத்தரப்பு இருந்தாலே, அதுவொரு சரியான படையாக இருக்க முடியுமென்றும் அவர் எம்மிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், அடுத்த ஐ.நா. அமர்வில் தன்னுடைய அறிக்கையை வெளியிடவுள்ளதாகவும், அதில் இவ்விடயங்கள் குறித்து சில சிபாரிசுகளை முன்வைக்கவுள்ளதாகவும் ரீட்டா இஷாக் குறிப்பிட்டார்” என்றார் சுமந்திரன்.

Related Posts