Ad Widget

சிறீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் ADSL புரோட்பாண்ட் இணைய சேவைகளில் தடங்கல்!

சிறீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் ADSL புரோட்பாண்ட் இணைய சேவைகளில் நாடுமுழுவதிலும் கடந்த வாரத்தில் இருந்து தடங்கல்கள் ஏற்பட்டுள்ளது. அவர்களால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இணைப்பு வகைகளில் ஒரு சில தவிர்ந்த ஏனையவற்றில் இந்தத்தடங்கல் ஏற்பட்டிருப்பதாக தெரியவருகிறது. கணக்குகளுக்கான கடவுச்சொல் பயனாளர் சொல் ஆகியவற்றினை பரிசோதிக்கும் சேவரில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக இந்தத்தடங்கல் ஏற்பட்டுள்ளதாக ரெலிகொம் இன் தொழில்நுட்பப்பிரிவில் இருந்துகிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Router களில் ADSL சமிக்ஞை விளக்குகள் எரிகின்ற போதும் Internet இற்கான ஒளிரும் விளக்குகள் ஒளிராமல் காணப்படும் அல்லது அது ஒளிர எடுக்கும் நேரம் நீண்டதாக இருக்கும் இந்த அறிகுறிகளுடன் இணைய சேவை தடைப்பட்டிருப்பதாக பாவனையாளர்கள் பலரும் முறைப்பாடுகளை பதிந்தவண்ணமுள்ளதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில வகை Router களில் பயனாளர்சொல் மற்றும் கடவுச்சொல் மூலமான இணைப்பு செயலிழந்து பொதுவான திறந்த இணைப்பு (Bridge Connection) வேலைசெய்வதாகவும் அது கூட மிகவும் மெதுவான இணைப்பாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனைச்சீர்செய்வதற்காக பொறியலாளர்கள் சிரமமப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் அதனால் பாவனையாளர்கள் பலரும் தமது அன்றாட இணைய நடவடிக்கைகளினை மேற்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வருட ஆரம்பத்தில் இருந்து கட்டற்ற இணைய இணைப்பு வகையினை நிறுத்தி புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய வரையறுத்த இணைய இணைப்புக்களை அறிமுகப்படுத்தியதில் இருந்து இவ்வாறான இணைய சேவைத் தடங்கல்களால் புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்கள் ADSL இணைய சேவை குறித்து பெரும் மன உளைச்சலுக்குள்ளாகியிருப்பதாகவும். முறைப்பாடுகளை சமாளிப்பதற்கு தாம் பெரிதும் சிரமப்படுவதாகவும் பெயார்குறிப்பிடவிரும்பாத ரெலிக்கொம் அலுவலர் ஒருவர் எமது செய்திச்சேவைக்கு கருத்துத்தெரிவித்தார். இதன்காரணமாக அண்மைக்காலமாக வாடிக்ககையாளர்கள் தமது ADSL இணைய இணைப்புக்களை இரத்துச்செய்யும் வீதம் அதிகரித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறான தடங்கல்களிற்காக மாதாந்தங்கட்டணங்களில் எந்தவித கட்டணக்கழிவுகளையும் ரெலிக்கொம் வழங்குவதில்லை என்பதும் இணைய இணைப்பில் தங்கியுள்ள சிறிய நடுத்தர வகை நிறுவனங்களும் தனிநபர்களும் பெரியளவில் இதனால் பாதிப்புக்குள்ளாகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.அண்மையில் தொலைத்தொடர்பாடல் அமைச்சர் சகல மக்களுக்கும் தடையற்ற இணையசேவை வழங்குவதே தமது குறிக்கோள் என குறிப்பிட்டிருந்தமை நினைவுகூரத்தக்கது.

இவ்வாறான தடங்கல்கள் தொடருமாயின் வெகுவேகமாக வளர்ந்து வந்த ADSL புரோட்பாண்ட் இணைய சேவை பற்றிய நல்ல அபிப்பிராயம் வெகுவேகமாக மறைந்து ஏனைய தனியார் நிறுவனங்களின் கம்பியில்லா புரோட்பாண்ட் இணைய சேவைகளு்கான கேள்விவியினை அதிகரிப்பதற்கு வழிவகுத்துவிடும் என இணையப்பாவனையாளர்கள் பலரும் கருத்துத்தெரிவிக்கின்றனர். இதுவிடயத்தில் ஒரேதேசம் ஒரே குரல் என கோசமிடும் சிறீலங்கா ரெலிகொம் விரைந்து செயலாற்றுமா?

Related Posts