Ad Widget

சிறில் ரமபோச வடக்குக்கு நாளை விஜயம்

தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதியும் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுமான சிறில் ரமபோச, இன்று திங்கட்கிழமை மதியம் இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைத் தீர்வுக்கு உதவிகளை வழங்கும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர், இலங்கையில் இரு நாட்கள் மாத்திரம் தங்கியிருந்து பல தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

cyril_ramaphosa

இன்று மதியம் இலங்கைக்கு வருகைதரவுள்ள சிறில் ரமபோச, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் இன்றிரவு சந்திக்கவுள்ளார். அதற்கு முன்பாக, இன்று மாலை 5 மணியளவில் – வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நிமல் சிறிபால டி சில்வா, டக்ளஸ் தேவானந்தா, ரவூப் ஹக்கீம் ஆகியோரை சந்தித்து உரையாடவுள்ளார்.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் நாளை காலை கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

கொழும்பில் பேச்சுவார்த்தைகளை முடித்துக்கொண்டு, நாளை மாலை யாழ்ப்பாணத்துக்கு விசேட விமானம் மூலமாக விஜயம் செய்யவுள்ள ரமபோச, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்திப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறியையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

வடமாகாண விஜயத்தினை முடித்துக்கொண்டு நாளை இரவே கொழும்பு திரும்பும் ரமபோச, நாளை மறுதினம் அதிகாலை தென்னாபிரிக்காவின் கேப்டவுணை நோக்கி புறப்படவுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

Related Posts