”கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் தமிழ் வித்தியாலயம், சிங்கள வித்தியாலயம், முஸ்லிம் வித்தியாலயம் என்று தனித்தனியே பாடசாலைகள் அமைக்கப்படாமல், சிறிசேனவும் நடராசாவும் முகம்மட்டும் ஒன்றாக அமர்ந்து கல்வி கற்கும் முறை ஏற்படுத்தப்பட வேண்டும். அதுவே நல்லிணக்கத்திற்கு சிறந்த வழியாக அமையும்” என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
அரச வானொலியில் இன்று (வியாழக்கிழமை) ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மூவின சமூகமும் இணைந்து செயற்படுவதன் மூலமே நல்லிணக்கத்தை உருவாக்க முடியுமென தெரிவித்த வடக்கு ஆளுநர் இனம், மதம், குலம் முதலான பேதங்களை மறந்து ஒன்றாக பயணிக்க வேண்டுமென இதன்போது வலியுறுத்தினார்.
இதேவேளை வடக்கின் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் தன்னாலான சகல உதவிகளையும் செய்வதாக குறிப்பிட்டதோடு, இந்நடவடிக்கைகளை வலுப்படுத்த மத்திய அரசின் சகல உதவிகளையும் பெற்றுக்கொடுப்பதாகவும் உறுதியளித்தார்.