Ad Widget

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வெளியிட்ட கருத்து முற்றிலும் பொய்யானது;-ஈ.சரவணபவன்

saravanabavan_CI‘தெல்லிப்பழை உண்ணாவிரத போராட்டத்தின் போது எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படவில்லை என்று காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வெளியிட்ட கருத்து முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது’ என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

‘கடந்த மாதம் 15ஆம் திகதி தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வளாகத்தில் வலிகாமம் வடக்கு மக்களை மீள்குடியேற அனுமதிக்குமாறு கோரி பொதுமக்கள் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்களால் நடாத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, இராணுவ புலனாய்வாளர்களால் உண்ணாவிரத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. உதயன் பத்திரிகை செய்தியாளர் உட்பட பல செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. புகைப்படக் கருவிகளும் உடைத்து எறிக்கப்பட்டன’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டவர்களை நான் பிடித்து தெல்லிப்பழை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்ததுடன், தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் சம்பவம் குறித்து முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளேன். அவ்வாறு இருக்க அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை என காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஈ.எம்.எம்.ஏக்கநாயக்க தெரிவித்தது முற்றிலும் பொய்யானது’ என சரவணபவன் எம்.பி சுட்டிக்காட்டினார்.

‘கடந்த 19ஆம் திகதி தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் சி.ஜ.பி.ஜ 392/101 என்ற தகவல் புத்தகத்தில் ‘உண்ணாவிரத போராட்டத்தின் போது அங்கு இருந்த மக்களிற்கு அடித்தது சம்பந்தமாக முறைப்பாடு பதிவு செய்துள்ளேன். அந்த முறைப்பாட்டில் பொலிஸ் அதிகாரியின் கையொப்பமும் உள்ளது.

அடுத்த நாள் நான் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு சென்ற போது, தெல்லிப்பழை பொலிஸ் பொறுப்பதிகாரி அங்கு இல்லை. இன்னிலையில் உண்ணாவிரத்தில் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் முறைப்பாட்டு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட விடயம் நடக்கவில்லை என்றும் காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஈ.எம்.எம். ஏக்கநாயக்க பத்திரிகையாளர் சந்திப்பில் எவ்வாறு கூறலாம்’ என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Related Posts