Ad Widget

சின்னப்பையன் நாமல் வரலாறு தெரியாமல் கதைக்கக்கூடாது: மாவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதும் செய்யவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஐபக்சவின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஐபக்ச வடக்கிற்கு வந்து கூறுவதானது உண்மைக்குப் புறம்பான குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவை என்பதுடன் உண்மைத் தன்மையோ நியாயமோ இல்லாத அவருடைய இந்தக் கருத்துக்களை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சின்னப் பையனான நாமல் ராஐபக்ச வரலாறுகள் தெரியாமல் கதைக்கக் கூடாது. அவர் சார்ந்திருக்கின்ற கட்சியும் அவரது தந்தையும் தமிழ் மக்களுக்கு என்னதைச் செய்தனர். என்னதை செய்து வருகின்றனர் என்பது மக்களுக்குத் தெரியும். குறிப்பாக இவர்கள் ஆட்சியில் இருந்த போது இனப்பிரச்சனைக்கான தீர்வை அவர்களும் கொடுக்கவில்லை.

அதற்கான முயற்சிகளை இப்போது நாங்கள் எடுத்த போதும் குழப்பியடித்தவர்களும் இவர்கள் தான். ஆகவே வடக்கிற்கு வந்து உண்மைக்கு மாறான கருத்துக்களைச் சொல்வதைவிடுத்து அவர்கள் மீதான போர்க்குற்றங்கள் தொடர்பில் அவரும் அவர் சார்ந்திருக்கின்ற கட்சியும் அவரது தந்தையும் பதிலளிக்கத் தயாரா என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கேள்வியெழுப்பியுள்ளார்.

வடக்கிற்கு விஜயம் செய்த நாமல் ராஐபக்ச கூட்டமைப்பினர் மக்களுக்காக எதனையும் செய்யவில்லை. அவர்கள் தமது நலன்கள் தொடர்பிலே பேசுவதாக குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார். இந் நிலையில் யாழில் இடம்பெற்ற நிகழ்வின் கலந்து கொண்டிருந்த மாவை சேனாதிராசாவிடம், நாமல் ராஐபக்ச தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாமல் ராஐபக்சவின் தந்தையின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு என்ன நடந்ததென்பதும் அவர்கள் தமிழ் மக்களுக்கு அன்றும் இன்றும் என்ன செய்கின்றனர். எவ்வாறான மனநிலையுடன் செயற்பட்ட வருகின்றனர் என்பதெல்லாமல் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக இனப்பிரச்சனைக்கான திர்வு விடயத்தை எடுத்துக் கொண்டால் எங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளிலிருந்து அவர்களாகவே வெளியேறிச் சென்றிருந்தார்.

இனப்பிரச்சனைக்குத் தீர்வோ அல்லது போரினாலே பாதிக்கப்பட்ட எங்கள் பிரதேசத்தின் அபிவிருத்திக்காகவோ செயற்படாமல் எங்களுக்கும் இனத்திற்கும் விரோதமாக செயற்பட்டவர்கள் இவர்கள் தான். இனிப்பிரச்சனைக்கு தீர்விற்கு 2015 ஆம் ஆண்டின் பின்னர் நாடாளுமன்றத்திலே ஏகமனதாக ஒரு அரசமைப்பு உருவாக்க வேண்டுமென்று அதில் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்று தீர்மானம் எடுக்கப்பட்டு புதிய அரசமைப்பு உருவாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது.

அப்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்த நேரத்தில் தான் நாங்கள் அந்த முயற்சியை எடுத்திருந்தோம். அதனூடாக இடைக்கால அறிக்கை வந்துது. அது முன்னேற்றகரமான அறிக்கை. அது முழுமையான தீர்வாக இல்லவிட்டாலும் அவ்வாறு அந்த அறிக்கை வந்த போது அவர் சார்ந்திருக்கின்ற கட்சியினரும் அவரது தந்தையாரும் இந்த இடைக்கால அறிக்கை நாட்டை பிளவுபடுத்தப் போகின்றது எனப் பிரச்சாரம் செய்தனர்.

அது மட்டுமல்லாமல் அரசியல் சூழ்ச்சியொன்று நடைபெற்ற நேரத்தில் நாடு பிளவுபடப் போகின்றது என்பதால் தான் நாடாளுமன்றத்தைக் கலைக்க முயற்சி எடுத்து நாடாளுமன்றத்தைக் கலைத்தோம் என்று சொன்ன அதே கட்சியில் இருக்கின்ற நாமல் ராஐபக்ச வரலாறுகளைத் தெரியாமல் இப்பொது ஐனாதிபதித் தேர்தல் வரவிருக்கின்ற நேரத்தில் உண்மைகளுக்கு மாறாக மிகக் குறுகிய நோக்கத்தோடு மிக ஏமாற்றுத் தனமாக உண்மைகளுக்கு மாறாக சொல்கின்ற கருத்துக்களையிட்டு நாங்கள் மிக மனவருத்தமடைகிறோம். அத்தகைய கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவிக்கின்றோம். எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம்.

மேலும் போர் முடிந்த பொழுதும் போர்க்காலத்திலும் போர்க்குற்றங்களை யார் இழைத்தார்கள் என்பதும் அவருடைய குடும்பத்தில் எவ்வளவு குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன என்பதும் தெரியும். அவர்கள் மீது எத்தனையோ குற்றங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியாது. அவர்கள் மீது போர்க்குற்றங்கள் எத்தனையோ இருக்கின்றது.

அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லாமல் அவற்றுக்கான மாற்று வழியைச் சொல்லாமல் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்பதை வற்புறுத்தாமல் வடக்கு கிழக்கை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமெனப் பதில் சொல்லாமல் வெறுமையாக உண்மைக்கு மாறாக கருத்துக்களை மாத்திரம் சொல்வதையிட்டு நாங்கள் மிக வேதனை அடைகிறோம். கண்டனம் தெரிவிக்கின்றோம். அவர்கள் உண்மைக்கு மாறான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் சொல்வது எந்தவகையிலும் உண்மையானதும் நியாயமானதும் அல்ல என்றார்.

இதேவேளை, தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் வெளியாகும் செய்திகள் குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில்,

தேசிய அரசாங்கத்தில் பங்கெடுப்பதை நாங்கள் இன்னமும் முடிவு செய்யவில்லை. அவ்வாறாக நாங்கள் அரசில் இணைய மாட்டோம். எதிரணியில் இருந்தே செயற்படுவோம். அதே நேரம் இனப்பிரச்சனைத் தீர்விற்காக தேசிய அரசாங்கம் அமைத்து அதனைத் தீர்ப்பதாக இருந்தால் அதற்காக எதிரில் இருந்து எங்கள் ஆதரவை நாங்கள் கொடுப்போம்.

ஆனால் அமைச்சர்களாக தேசிய அரசாங்கத்தில் நாங்கள் இருக்க மாட்டோம். அது தான் உண்மையானது. அரசில் பங்காளிகளாக இணைவதற்கு எங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்கவில்லை. சென்ற காலத்திலும் நல்லாட்சி என்று சொன்ன போதும் தமிழ் மக்களின் நலனுக்காக அந்த அரசை ஆதரித்து வந்திருக்கிறோமே தவிர அரசில் இணையவில்லை.

இனப்பிரச்சனைக்கான தீர்விற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்த போது நாங்கள் ஆதரித்து வந்தோம். அதற்கான முயற்சிகள் தொடர்ந்த போதும் ஆதரித்து வந்தோம். ஆகவே இனிமேல் அமைக்கப்படும் தேசிய அரசாங்கம் தொடர்பில் விடயங்களை நன்கு ஆராய்ந்து எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்று நாங்கள் தீர்மானிப்போம்.

அதற்காக தேசிய அரசாங்கத்திலோ அல்லது அரச பங்காளியாகவே நாங்கள் இருக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் எங்களுக்கு இருக்காது. இருக்கபோவதுமில்லை. நாங்கள் அதில் உறுதியாக இருப்போம் என மாவை சேனாதிராசா மேலும் தெரிவித்தார்.

Related Posts