Ad Widget

‘சிதைந்துள்ள சமூகத்தை ஒன்றிணைப்போம்’

‘உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ், சிங்கள மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த இனிய சித்தரைப் புத்தாண்டு வாழ்த்துகள். மலர்ந்திருக்கும் இந்த இனிய ஆண்டானது, உங்கள் அனைவருக்கும் செழிப்புமிக்க ஆண்டாக அமைய வேண்டும்’ என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ், சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘சித்திரைப் புத்தாண்டானது வெறுமனே ஒரு பண்டிகையாக அல்லாமல், எமது கலை, கலாசாரம், பாரம்பரிய விளையாட்டுக்கள் என பல்வேறு அம்சங்களோடு பிண்ணிப் பிணைந்ததாக பல நூற்றாண்டு மேன்மையான எமது வரலாற்றுக்குச் சான்றாக இருப்பது சிறப்பம்சமாகும்.

அது மாத்திரமன்றி, எமக்கே உரித்தான எமது பாரம்பரியங்களோடு தனித்துவமான சமூகங்களாக சித்திரை புத்தாண்டை கொண்டாடும் நாம், சித்திரைப் புத்தாண்டானது தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் இணைக்கும் ஒரு பண்டிகையாக மட்டுமன்றி நம்மிரு சமூகங்களும் சேர்ந்து கொண்டாடும் ஒரே பண்டிகையா என்பதையும் பெருமையோடே நினைவில் கொள்ள வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘எனவே, மலர்ந்துள்ள இந்த புதிய ஆண்டில், கடந்த காலங்களிலேயே பல்வேறு சம்பவங்களின் நிமித்தம் சிதைந்துபோயுள்ள சமூகங்களுக்குமிடையேயான நல்லுறவை கட்டியொழுப்ப அனைவரும் முன்வரவேண்டும்’ என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

‘மலர்ந்துள்ள இப்புத்தாண்டானது, உங்கள் அனைவரதும் எதிர்ப்பார்ப்புக்கள் நிறைவேறுகின்ற சுபீட்சமான ஆண்டாக அயைவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts