Ad Widget

சிட்னியில் இந்தியப் பெண் குத்திக்கொலை: இருநாடுகளும் கண்டனம்

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் இந்தியப் பெண் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டமையை இரண்டு நாடுகளின் அதிகாரிகளும் கண்டித்துள்ளனர்.

sydney-australia-women-murd

ஆஸ்திரேலியாவின் மிக்பெரிய நகரமான சிட்னியில் பூங்கா ஒன்றில் பிரபா அருண் குமார் என்ற பெண் சனிக்கிழமை குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் ஆஸ்திரேலியப் பொலிஸார் யாரையும் இதுவரைக் கைதுசெய்யவில்லை.

ஆனால், இனத்துவேஷத்துடன் சம்பந்தப்பட்ட தாக்குதலாக இதனைக் கருதுவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.

இந்தக் கொலையால் மிகவும் வேதனை அடைந்துள்ளதாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் கூறினார்.

‘கொடூரமான, கோழைத்தனமான இந்தக் கொலையை புரிந்த குற்றவாளிகளை’ சட்டத்தின் முன் நிறுத்த எல்லாவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று சிட்னி மாநில முதல்வர் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது….

சிட்னியில் கத்திக்குத்துக்குள்ளாகி உயிரிழந்த இந்தியப் பெண், இறப்பதற்கு முன்பு தனது கணவருக்குப் போன் செய்து தன்னைக் கத்தியால் குத்தி விட்டதை கூறிய விவரம் வெளியாகியுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்தவர் பிரபா அருண் குமார். சிட்னியில் சாப்ட்வேர் என்ஜீனியராக இருந்து வந்தார். சனிக்கிழமை இரவு பிரபா, வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பி விட்டனர்.

பிரபா வசித்து வந்த வீட்டுக்கு வெகு அருகில் இந்த கத்திக் குத்து சம்பவம் நடந்துள்ளது.

கத்தியால் குத்தப்பட்டு கீழே விழுந்த பிரபா செல்போன் மூலம் தனது கணவரைத் தொடர்பு கொண்டுள்ளார். அவன் என்னைக் கத்தியால் குத்தி விட்டான் டார்லிங் என்று கூறி விட்டு மயங்கி விழுந்துள்ளார்.

இந்த வார்த்தையைக் கூறிய பின்னர் செல்போன் அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. அதன் பின்னர் அவரை அக்கம் பக்கத்தில் இருந்தோர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் ரத்தம் அதிகம் போய் விட்டதால் அவர் உயிரிழந்துள்ளார்.

பிரபாவின் கணவர் அருண் குமார் பெங்களூரில் வசித்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு 9 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது அருண்குமார் தனது மகளுடன் சிட்னி வந்துள்ளார். அடுத்த மாதம் பிரபா இந்தியா திரும்பவிருந்த நிலையில் கொடூரமான முறையில் மரணத்தைச் சந்தித்துள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்து இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பெரும் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அதன் பின்னர் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தன. இந்த நிலையில் தற்போது ஒரு பெண் கொலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts