Ad Widget

சிங்கவர்களுக்கும் தமிழர்களுக்கும் கலாச்சாரம் ஒன்றே ;- காங்கேசன்துறை எஸ்.பி

policeசிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரே கலாச்சாரம் தான் சிங்கள பொலிஸாருக்கு தமிழரின் கலாச்சாரம் தெரியாது என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் கூற்றை நாம் எதிர்க்கின்றோம் என காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் தமயந்த விஜயசிறி தெரிவித்தார்.

யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ் அலுவலகத்தில் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது.

அதில் வடக்கு முதல்வர் இங்கு பணியாற்றி வருகின்ற சிங்கள பொலிஸார் தமிழ் மக்களுடைய கலாச்சாரம் தெரியாதவர்கள் அவர்களை அரசு திருப்பி பெறவேண்டும் என கோரியிருந்தமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் முகமாகவே இதனை அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

வடக்கு முதலமைச்சரின் கருத்து தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் அகியோர் பதிலளித்துள்ளனர். எனினும் வடக்கு முதல்வரின் கருத்தை நாமும் எதிர்க்கின்றோம்.

இருப்பினும் வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உள்ள முறைப்பாட்டு பகுதியில் தமிழ் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தமிழ் மொழியில் முறைப்பாடுகளும் பெறப்படுகின்றன.

2009 ஆம் ஆண்டு யுத்த முடிவுக்குப் பின்னர் தமிழ் உப பொலிஸ் பரிசோதகர்கள் 60 பேர் வடக்கிற்கு நியமிக்கப்படுள்ளனர். அவர்களில் இருவர் யாழ்ப்பாணத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதுடன் பெண் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 460 தமிழ் பொலிஸார் பயிற்சி முடித்துக் கொண்டு வடக்கு மாகாணத்தில் கடமையாற்றி வருகின்ற வேளை 800 பேருக்கு தற்போது பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.

அவர்களும் விரைவில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதேவேளை, வடக்கில் உள்ள நீதிமன்றங்களுக்கு பொலிஸ் நிலையங்களில் இருந்து தமிழ் மொழியிலேயே அறிக்கை சமர்ப்பிக்கப்படுகின்றது. மேலும் 1996ஆம் ஆண்டு அமுலான திட்டத்தின்படி காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் சிங்கள மொழியைக் கொண்ட பொலிஸாருக்கு தமிழ் மொழி கற்பிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி இதுவரை 9 குழுக்கள் நிறைவு செய்துள்ளதுடன் 10 ஆவது குழு பயிற்சியை நிறைவு செய்யவுள்ளது.

சிங்களவர்களும் வெற்றிலை சாப்பிடுகின்றனர் தமிழர்களும் வெற்றிலை சாப்பிடுகின்றனர். அதுபோல சிங்களவர்களும் சோறு சாப்பிடுகின்றனர் தமிழர்களும் சோறு சாப்பிடுகின்றனர். எனவே சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரே கலாச்சாரம் தான். மேலைத்தேச நாடுகளைப் பொறுத்தவரை அங்குள்ள மக்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கூட சிரிக்காத சூழலில் எமது நாட்டில் இன மத வேறுபாடு இல்லாது உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஐரோப்பியர் இலங்கைக்கு வந்த காலத்தில் சிங்களவர்களும் தமிழர்களும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர். அப்போதும் கூட பௌத்தமும் இந்து மதமும் இருந்தன. அத்துடன் அநுராதபுரம் பொலநறுவை கதிர்காமம் போன்ற இடங்களில் பௌத்த விகாரைகளுக்கு அருகில் இந்துக் கோயில்களும் உள்ளன. கதிர்காமத்தில் உள்ள முருகக் கடவுளை இந்துக்களும் பௌத்தர்களும் வணங்குகின்றனர். மேலும் நல்லூர் ஆலய திருவிழாக்காலத்தில் கூட பொலிஸார் வேஸ்டி அணிந்து சைவ உணவுகளையே சாப்பிட்டிருந்தனர். இவற்றிலும் கூட கலாச்சார வேறுபாடு காணப்படவில்லை.

எனவே எமது நாட்டினை சிறந்த நாடாக கட்டியெழுப்பவே நாம் உழைத்து வருகின்றோம் என்றார். இதன்போது யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்சிகேராவும் கருத்துக்களை வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

யாழ்ப்பாணமே குற்றங்கள் குறைந்த மாவட்டமாகும்: சமன் சிகரோ

Related Posts