Ad Widget

சிங்கள மீனவர்களை மன்னாரில் குடியமர்த்துவதற்கு உள்ளூர் மீனவர்கள் கடும் எதிர்ப்பு!

கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் தென்பகுதி மீனவர்களுக்கு மன்னாரில் தொழில் செய்ய மாற்றிடம் கொடுத்து, அவர்களுக்கு குடியேற காணியும் வழங்கி, குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கமும் அதிகாரிகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதை ஏற்றுக்கொள்ள முடியாது என வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட கிராமிய மீனவ சம்மேளனம் மற்றும் மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சமாசம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த விசேட கலந்துரையாடல், மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

‘மன்னாரில் கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் தென்பகுதி மீனவர்களுக்கு மன்னாரில் தொழில் செய்ய மாற்றிடம் கொடுத்து அவர்களுக்கு குடியேற காணியும் வழங்கி குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசும்,அதிகாரிகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை தெரிய வந்துள்ளது. குறித்த நடவடிக்கைகளினால் மன்னார் மாவட்ட மீனவர்கள் கொதிப்படைந்துள்ளனர். சிலாவத்துறை மற்றும் முள்ளிக்குளம் போன்ற பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரச காணிகளில் படையினர் சுற்றி வளைத்து, முகாம்களை அமைத்துள்ள நிலையில் குறித்த காணிகள் இன்று வரை விடுவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், தென்னிலங்கையினைச் சேர்ந்த (நீர்கொழும்பு) மீனவர்களை முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது மன்னார் மாவட்ட மீனவர்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் பல தேவைகளுடன் உள்ளனர். குறிப்பாக தென்னிலங்கை மீனவர்கள், மன்னார் கடற்பரப்பில் மேற்கொண்டு வரும் சட்டவிரேத மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் மித மிஞ்சிய வருகை போன்ற நடவடிக்கைகள் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு தொல்லை கொடுக்கும் செயற்பாடாக அமைந்துள்ளன. இந்த பிரச்சினைகள் குறித்து, மன்னார் மீனவர்கள் உரிய தரப்பினருக்கு பலமுறை தெரியப்படுத்தியும் அரசாங்கமோ அதிகாரிகளோ அதனைக் கண்டு கொள்வதேயில்லை.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை(13) பிற்பகல் 1.30 மணியளவில் சிலாவத்துறை மையப்பகுதியில் இருந்து முசலி பிரதேச செயலாளர் பணிமனை நோக்கி ஊர்வலமாக சென்று எமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதோடு, மகஜர் ஒன்றையும் கையளிக்க திட்டமிட்டுள்ளோம். எனவே, வடமாகாணத்தில் உள்ள அனத்து மீனவ அமைப்புக்களும் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் இந்த விடயத்தில் அக்கரை செலுத்த வேண்டும் என மன்னார் மாவட்ட மீனவர்கள் சார்பாக கோரிக்கை விடுக்கின்றோம்’ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட கடற்றொழில் சம்மேளனத்தின் தலைவர் ஏ.ஜஸ்டின் சொய்சா, மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts