Ad Widget

சிங்கள மாணவர்களுக்கு கிடைக்கின்ற வசதி தமிழ் மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. எஸ்.சிவலிங்கராஜா

sivapoomi-schoolவிளையாட்டுத்துறையில் சர்வதேச ரீதியில் நடைபெறும் போட்டிகளில் பங்குபற்றுகின்ற சிங்கள மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதி வாய்ப்புக்கள் தமிழ் மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

தமிழ்த் தலைவர்களாகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் முதலமைச்சர்கள் போன்றவர்கள் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றும் தமிழ் மாணவர்களுக்கும் உதவிகளை வழங்க முன்வரவேண்டும் என யாழ் . பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் எஸ்.சிவலிங்கராஜா தெரிவித்தார்.

ஆசிய பசுபிக் விசேட ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றி வெண்கலப் பதக்கத்துடன் நாடு திரும்பிய சிவராஜா தனுஷனுக்கும் மற்றைய இரண்டு வீரர்களுக்கும் கோண்டாவில் சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலை நிறுவுநர் கலாநிதி ஆறுதிருமுருகன் தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் பேராசிரியர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்தப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு பத்து ஆண்டுகளில் இங்குள்ள பிள்ளைகள் உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்கள். அவுஸ்திரேலியாவின் நியூகாசில் சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில் பங்குபற்றுவதற்காக இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்குப் பட்டதுன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

போக்குவரத்துச் செலவுக்காகப் பெருந்தொகைப் பணம் தேவைப்பட்டது. அதனை வழங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்காகச் சென்ற சிங்கள மாணவர்கள் அனைவருக்கும் ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ நிதியுதவியையும் போக்குவரத்து ஏற்பாடுகளையும் வழங்கியிருந்தார்.

எமது தமிழ்த் தலைவர்கள் எவருமே இந்தப் பிள்ளைகளுக்கு உதவ முன்வரவில்லை என்பது வேதனையான விடயம் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் இந்நிகழ்வில் உரையாற்றிய கலாநிதி ஆறுதிருமுருகன் கூறுகையில்,

இந்த மாணவர்களை ஆசிய பசுபிக் விசேட ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்புவதற்கு இந்தப் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டனர். இறுதிநேரம் வரை விசா கிடைக்குமா என்ற ஏக்கம் எம்மைப் பெரும் துன்பப்படுத்தியது.

இந்தப் பிள்ளைகள் எவ்வளவோ கஷ்டங்களின் மத்தியில் போட்டிகளுக்குச் சென்று வந்திருக்கின்றார்கள். இதுவரை இவர்களை எந்தவொரு அரசாங்க அதிபரோ, நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களோ எட்டியும் பார்க்கவில்லை என்றார்.

இந்நிகழ்வில் இந்தியத் துணைத் தூதர் எஸ்.மகாலிங்கம், யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, மாகாண சபை உறுப்பினர் த.சித்தார்த்தன் உட்பட மற்றும் பலர் பாராட்டுரையினையும் காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீவிக்னேஸ்வரன் நன்றியுரையினையும் நிகழ்த்தினர். அத்துடன் ஆசிய பசுபிக் விசேட ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு 200 மீற்றர் ஓட்டத்தில் வெண்கலப் பத்கம் வென்ற சிவராஜா தனுசன் மற்றும் சிவராஜா துஷ்யந்தன், ராஜன் பிளைக்னோ ஆகியோர் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

Related Posts