Ad Widget

சிங்களவர்களுக்கு ஒரு நீதி தமிழர்களுக்கு ஒரு நீதியா? – சிவாஜிலிங்கம்

முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சாவிற்கு பீல்ட் மார்சல் பட்டத்தை கொடுத்து அவருக்கு பொது மன்னிப்பு வழங்க முடியும் என்றால் ஏன் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசு உண்மை நிலையினை தெரியப்படுத்த வேண்டும் என்றும் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் நேற்று யாழ்.பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் துண்டுப்பிரசுரம் வழங்கலும் கவனயீர்ப்பு போராட்டமும் நடைபெற்றது.அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

20வருடங்களுக்கு மேலாக அரசியல் கைதிகள் சிறையில் துன்பப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்.இந்த நிலையில் இப்போது புதிய ஆட்சியை தெரிவு செய்யும் போது தமிழ் மக்களுடைய ஆதரவு அதிகளவில் இருந்தது.

புதிய ஜனாதிபதி அரசியல் கைதிகள் விடுவிப்பார்.காணாமல் போனவர்கள் தொடர்பில் தீர்வு கிடைக்கும்.இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் பெருமளவிலாவது விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கை இன்று வீண்போகக் கூடிய சூழல் உள்ளது.

அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என அரசு கூறுகின்றது.ஆனால் 300ற்கும் மேற்பட்ட
அரசியல் கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறான அரசின் கூற்றினால் உறவுகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இவர்கள் தொடர்பில் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தான் கூறமுடியும் என அரசு கூறுமாக இருந்தால் மக்களை மீண்டும் ஏமாற்றும் செயல் என்றே கருதமுடியும்.எனினும் அடையாளமாக ஒரு தொகுதியினரை என்றாலும் அரசு விடுதலை செய்ய வேண்டும்.

சிங்களவர்களுக்கு ஒரு நீதி தமிழ் மக்களுக்கு ஒரு நீதியா? எனவே புதிய ஜனாதிபதி தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts