Ad Widget

சிங்கப்பூரின் தேசத் தந்தை லீ குவான் யூ காலமானார்!

சிங்கப்பூரின் தேசத் தந்தை எனப் புகழப்படும் லீ குவான் யூ இன்று திங்கட்கிழமை அதிகாலை மரணமானார் என அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் அறிவித்தது.

singapoor-lee-ku-wan

91 வயதான லீ குவான் யூ கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் அவர் இறந்தார் என அந்நாட்டின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதனை அந்நாட்டரசு மறுத்திருந்தது. இந்நிலையிலேயே லீ குவான் யூ இன்று அதிகாலை உயிரிழந்தார் என அந்நாட்டின் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

புதிய சிங்கப்பூரை உருவாக்கியவர் என்ற பெருமை பெற்ற லீ குவான் யூ தனது நண்பர்களுடன் இணைந்து மக்கள் செயல் கட்சியை உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.

சிங்கப்பூரின் முதலாவது பிரதமராகப் பதவியேற்ற அவர் 31 வருடங்கள் சிங்கப்பூரை ஆட்சி செய்தார். இவரின் காலத்திலேயே மிகச் சிறிய தேசமான சிங்கப்பூர் உலகப் பொருளாதாரத்தில் வலுவான நாடாக எழுச்சி பெற்றது.

2003 ஆம் ஆண்டுடன் அரசியலில் இருந்து லீ குவான் ஒதுங்கினார். ஆனால் பின்னர் வந்த ஆட்சியாளர்கள் இவருக்காக ‘மதியுரை அமைச்சர்’ என்ற பதவியை உருவாக்கி வழங்கியிருந்தனர்.

2004 இலிருந்து இந்தப் பதவியை வகித்த லீ குவான் முதுமை காரணமாக அப்பதவியிலிருந்து 2011 இல் விலகினார். சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற பொன் விழா ஆண்டு இந்த வருடமாகும் இதனை வெகுசிறப்பாக கொண்டாட வேண்டும் என ஆண்டின் தொடக்கத்தில் மக்களை லீ. குவான் யூ கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இவர் தனது ஆட்சிக் காலத்தில் சர்வாதிகாரி போன்று நடந்தார் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts