Ad Widget

சிகிரியா சுவரில் எனது மகள் தெரியாமல் எழுதிவிட்டால் பொது மன்னிப்பு வழங்குங்கள் – தாய் மன்றாட்டம்

சிகிரியாவில் உள்ள சுவரில் எனது மகள் தெரியாமல் எழுதிவிட்டால் அவளுக்கு அதில் எழுதக் கூடாது என்பது தெரியாது தெரியாமல் செய்த எனது மகளுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? எப்படியாவது எனது மகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குங்கள் என உதயசிறியின் தாய் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

sekereya

“உதயா” என தனது பெயரை எழுதியதாக குற்றம் சாட்டப்பட்ட மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த யுவதிக்கு தம்புள்ளை நீதிமன்றம் இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்தது சம்பந்தமாக அவரது தாயார் கருத்துதெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்

எனது மகள் கடந்த 14.02.2015 அன்று தனது நண்பிகளுடன் சிகிரியாவிற்கு சுற்றுலா சென்றபோது அங்குள்ள சுவரில் பலரது பெயர்கள் எழுதியிருப்பதை கண்டு அதில் தன்னுடைய பெயரையும் எழுதியுள்ளாள்.

அவளுக்கு அந்த சுவரில் எழுதக் கூடாது என்பது தெரியாது அப்படி தெரிந்திருந்தால் நிச்சயமாக அவள் எழுதியிருக்க மாட்டாள். தெரியாமல் செய்த தவறுக்கு எனது மகளுக்கு கடந்த(02.03.2015) அன்று தம்புள்ளை நீதிமன்றம இரண்டு வருட சிறைத் தண்டணை விதித்துள்ளார்கள் .

எனது மகளின் வருமானத்தில்தான் நான் சீவியம் நடத்திவருகின்றேன். நான் மாவு, அப்பம் விற்றுத்தான் வாழ்ந்துவருகின்றேன்.

எனது மகள் கைது செய்யப்பட்டது பற்றி ஊடகங்களில் பல உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளிவந்துள்ளது அதனை நான் முற்றாக மறுக்கின்றேன்.

சில ஊடகங்கள் எனது மகள் காதலனின் பெயரை எழுதியதாக பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளனர் அது முற்றிலும் தவறான செய்தி எனது மகள் அவளுடைய பெயரையும் அவளது நண்பியின் பெயரின் முதல் எழுத்தையுமே எழுதியுள்ளார் அவர் வேறுயாருடைய பெயரையும் எழுதவில்லை.

எனவே என்னுடைய மகளை ஊடகங்கள் அவமானப்படுத்தியுள்ளனர். இனியும் அதுபோன்ற செய்திகளை தயவுசெய்து யாரும் வெளியிடவேண்டாம். தவறான செய்திகளை போட்டு எனது பிள்ளையின் வாழ்க்கையை நாசமாக்கிவிடாதீர்கள்.

ஏற்கனவே இதுபோன்று எழுதிய சிலரை ஒரு சில தினங்களில் தண்டப்பணம் மாத்திரம் அறவிட்டு விடுதலை செய்துள்ளார்கள் என அறிகின்றேன். எனவே அது போன்று எனது மகளையும் விடுதலை செய்வதற்கு அரசாங்கமும், எங்களுடைய அரசியல் வாதிகளும் எப்படியாவது உதவி செய்யவேண்டும்.

எங்களுக்கு உதவி செய்வதற்கு யாருமில்லை. சிங்களம் தெரியாததால் எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவர்கள் கூறியது கூட சரியாக புரியவில்லை கடைசியில் எனது மகளுக்கு இரண்டுவருட சிறைத்தண்டனை விதித்துள்ளார்கள்.

நான் ஒரு நோயாளி எனது மகள் விரைவில் வீடு திரும்பவில்லை என்றால் நான் சாவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே எப்படியாவது எனது மகளை மீட்டுத்தாருங்கள் என உங்கள் எல்லோரிடமும் கெஞ்சி மன்றாடி கேட்கின்றேன் என அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts