Ad Widget

சிஐடியினர் எனக் கூறி முல்லைத்தீவில் திருட்டு!

முல்லைத்தீவு மாவட்டம் செல்வபுரம் பகுதியில் நேற்று நள்ளிரவு 11.15 மணியளவில் வர்த்தகர் ஒருவரின் வீட்டினுள் சென்று நான்குபேர் கொண்ட குழுவினர் 60,000 பணத்தினை அபகரித்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,

நேற்று நள்ளிரவு வீட்டு உரிமையாளரின் பெயரைச் சொல்லி அழைத்த நான்குபேர், தாம் சிஐடியினர் எனவும், விடுதலைப்புலிகளின் பணம் தொடர்பாக உங்களிடம் விசாரணை நடாத்தவேண்டுமெனவும் வந்துள்ளனர்.

அவர்களில் இருவர் வீட்டினுள் நுழைய இருவர் வெளியே நின்றனர். வீட்டினுள் சென்றவர்கள் நீங்கள் விடுதலைப்புலிகளின் பணத்தினைப் பயன்படுத்தியே உங்கள் மகனை வெளிநாட்டுக்கு அனுப்பினீர்கள் என மிரட்டியுள்ளனர். அதற்கு உரிமையாளர் இல்லையெனக் கூறி வங்கியில் லோன் எடுத்த துண்டுகளைக் காட்டினார். ஆவணங்களை பார்வையிட்ட சந்தேக நபர்கள் வீட்டை சோதனையிடவேண்டும் என்றுகூறி வீட்டிலிருந்தவர்களை வீட்டின்நடுவே அமர்த்திவிட்டு வீட்டை சல்லடை போட்டுள்ளனர்.

அதன்பின்னர் வீட்டின் உரிமையாளரின் அடையாள அட்டையை வாங்கிய குறித்த நபர்கள் ‘நாளைக்கு விசாரணைக்கு வருவதாகக் கூறிச் சென்றுள்ளனர். குறித்த நபர்கள் மீது சந்தேகமடைந்த உரிமையாளர் நள்ளிரவே காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டைப் பதிவுசெய்துள்ள காவல்துறையினர் வீட்டிற்கு வந்து வீட்டு உரிமையாளரை பணம் ஏதாவது வைத்திருந்தீர்களா? என வினவினர். அப்போது குறித்த உரிமையாளர் பணம் வைத்த இடத்தினைப் பார்வையிட்டபோது அவர் வைத்திருந்த பணம் இல்லாமல் போயிருந்தது.

இதேவேளை வீட்டு உரிமையாளரின் அடையாள அட்டை வீட்டுக்கு வெளியே வீசிக்காணப்பட்டதுடன் வீட்டிற்குள் வந்த இரு சந்தேக நபர்களில் ஒருவர் தமிழில் சரளமாக பேசியதாகவும் மற்றவர் சிங்களத்திலும் கொச்சைத்தமிழிலும் கதைத்தாகவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts