Ad Widget

சாவகச்சேரி தற்கொலை அங்கி விவகாரம்: அழைப்புவிடுத்து ஏமாற்றிய அதிகாரிகள் மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி விவகாரம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு கொழும்பு 2 ஆம் மாடியில் தடுத்துவைக்கப்பட்டுள்ள எட்வேட் ஜுலியனை பார்வையிட வருமாறு அழைப்புவிடுத்து ஏமாற்றிய அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.

இந்த முறைப்பாட்டை இன்று திங்கட்கிழமை காலை ஜுலியனின் தந்தை சட்டத்தரணியுடன் சென்று பதிவு செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்க (ஐ.சி.ஆர்.சி) அலுவலகத்திலிருந்து ஜுலியனின் சகோதரிக்கு அழைப்பை மேற்கொண்ட அதிகாரி ஒருவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜுலியனை பார்க்க 2 ஆம் மாடிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

இதேவேளை ஜுலியனின் மனைவி சுகயீனமடைந்ததால் அவர் கொழும்பில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு சென்று பார்வையிடலாம் என்றும் தொலைபேசியில் தொடர்புகொண்ட செஞ்சிலுவைச் சங்க அதிகாரி தெரிவித்ததாக ஜுலியனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்மைய ஜுலியனின் சகோதரி மற்றும் தந்தை ஆகியோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு 2 ஆம் மாடிக்குச் சென்றபோது, நீண்ட நேரம் காத்திருக்க வைத்த அதிகாரிகள் ஜுலியன் அங்கு இல்லை எனவும் அவரை விசாரணைக்காக வேறு இடத்திற்கு மாற்றியுள்ளோம் எனவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜுலியனை பார்வையிட வருமாறும் தெரிவித்திருந்தனர்.

அத்தோடு ஜுலியன் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

எனினும் ஜுலியனின் மனைவி இருக்கும் வைத்தியசாலை தொடர்பான தகவலோ அல்லது பார்வையிடுவதற்கான சந்தர்ப்பத்தையோ அதிகாரிகள் வழங்க மறுத்துவிட்டதாகவும் ஜுலியனின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்த நிலையிலேயே ஜுலியனின் தந்தை கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்யவுள்ளார்.

Related Posts