Ad Widget

சாவகச்சேரி சம்பவத்தின் உண்மை விரைவில் வரும் என்கிறார் சுமந்திரன்!!

“ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற பகுதிகளில் வெடிபொருட்கள் மீட்கப்படுவது சர்வசாதாரண விடயம். ஆனால், சாவகச்சேரி சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும், தமிழரின் ஆயுதப் போராட்டம் மீண்டும் தலைதூக்கப் போகின்றது என்றும் தெற்கில் உள்ள சிலர் ஊளையிடுகின்றனர். இது வேடிக்கையானது. மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தமிழ் மக்கள் விரும்பவில்லை. ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடி உரிமைகளைப் பெறவே எமது மக்கள் விரும்புகின்றனர்.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சாவகச்சேரியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்தின் உண்மை நிலை விசாரணையின் பின் வெளிவரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ். தென்மராட்சி, சாவகச்சேரி மறவன்புலோ பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தற்கொலைத் தாக்குதலுக்கான அங்கி மற்றும் கிளைமோர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டன. இந்தச் சம்பவத்தையடுத்து குறித்த வீட்டில் தங்கியிருந்த முன்னாள் போராளியான குடும்பஸ்தர் ஒருவர் கிளிநொச்சியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்காகக் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் மஹிந்த அணியினர் கண்டபடி கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு ஏதுவான வெடிபொருட்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சமிக்ஞையாகும் என்றும், வெடிபொருட்கள் இரகசியமாக கொழும்புக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன என்றும், தமிழரின் ஆயுதப் போராட்டம் வடக்கில் மீண்டும் தலைதூக்கப் போகின்றது என்றும் மஹிந்த அணியின் உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்தக் கருத்துக்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு, கிழக்கில் 25 வருடங்களுக்கு மேலாக ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் இடம்பெற்ற பகுதிகளில் வெடிபொருட்கள் மீட்கப்படுவது சர்வசாதாரண விடயமாகும். இன்னும் 10 வருடங்கள் கடந்தாலும் குறித்த பகுதிகளில் பழைய வெடிபொருட்கள் மீட்கப்படும். இதனை பெரிய விடயமாக எடுக்கவேண்டிய அவசியம் இல்லை.

இந்நிலையில், சாவகச்சேரியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று தெற்கில் உள்ள சிலர் ஊளையிடுகின்றனர். அத்துடன் தமிழரின் ஆயுதப் போராட்டம் மீண்டும் தலைதூக்கப் போகின்றது என்றும் அவர்கள் கத்துகின்றனர். இது வேடிக்கையானது. தெற்கில் உள்ள மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி மீண்டும் வன்முறையை ஏற்படுத்தும் வகையில்தான் இவர்கள் இவ்வாறு கூக்குரல் இடுகின்றனர். இவர்களின் நோக்கங்கள் இனிமேல் நிறைவேறாது.

மீண்டும் ஆயுதப் போராட்டத்தை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் விரும்பவில்லை. ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடி உரிமைகளைப் பெறவே எம்மக்கள் விரும்புகின்றனர். இதனை அவர்கள் தேர்தலில் வாக்குமூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

சாவகச்சேரியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்தின் உண்மை நிலை விசாரணையின் பின் வெளிவரும். அதுவரைக்கும் நாம் மேலதிகமாக கருத்துக்கள் எதனையும் சொல்ல விரும்பவில்லை” – என்றார்.

Related Posts