Ad Widget

சாவகச்சேரியில் 59பேரில் 44 பேர் சாட்சியம், இராணுவத்திற்க்கு எதிராக அதிக சாட்சிகள்

சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பகுதிகளில் இருந்து 44 பேர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியம் அளித்துள்ளனர்.

missing-peple-chavakachcherey

யுத்த காலத்தின் போதும் அதன்பின்னரும் காணாமல் போனவர்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சாட்சியப்பதிவுகள் யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்டு இன்று சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

அதன்போது ஏற்கனவே வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் 10 கிராமசேவகர் பிரிவில் இருந்தும் 59பேர் சாட்சியப்பதிவுக்கு அழைக்கப்பட்டனர். எனினும் அவர்களில் 40 பேரின் சாட்சியப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலதிகமாக புதிய விண்ணப்பத்தில் இருந்து மேலும் 4பேர் இன்றைய தினம் சாட்சியம் அளித்திருந்தனர். அதன்படி இன்றைய தினம் 44 பேர் தமது முழுமையான சாட்சியப்பதிவுகளை ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நாவற்குழி ஆமி கொமாண்டர் துமிந்தவை கேளுங்கோ எங்க எங்கட பிள்ளைகள் என்று

சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மறவன்புலவு, கோயிலாக்கண்டி, தனங்கிளப்பு மற்றும் நாவற்குழி உள்ளிட்ட பகுதியில் பெருமளவிலானோர் 1996ஆம் ஆண்டில் காணாமற்போனதற்கு குறித்த காலப்பகுதியில் நாவற்குழி படைமுகாமில் இருந்த இராணுவ அதிகாரி துமிந்தவே காரணம் என இன்றைய தினம் பலர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியம் அளித்துள்ளனர்.

அதன்படி 1996ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாவற்குழியில் இராணுவ அதிகாரியாக கடமையாற்றி வந்த துமிந்த தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டு இன்றுவரை எங்குசென்றார்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாத நிலையில் இருக்கின்றோம் என தந்தையார் ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.

அதன்படி எனது 2 மகன்மார் காணாமல் போனதுக்கு குறித்த துமிந்த என்ற இராணுவ அதிகாரியே காரணம் என தெளிவாக சாட்சியமளித்துள்ளார்.

அத்துடன் கடந்த 1996 ஆம் ஆண்டு மறவன்புலவு பகுதியில் இடம்பெற்ற பாரிய சுற்றிவளைப்பின் போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு விடுவிப்பதாக கூறி அழைத்துச் சென்று காணாமல் போன தனது கணவனை மீட்டுத்தருமாறு குடும்பப்பெண்னொருவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்துள்ளார்.

அவர் மேலும் சாட்சியம் அளிக்கையில்,

1996.7.19ஆம் திகதி மறவன்புலவில் மேற்கொள்ளப்பட்ட பாரிய சுற்றிவளைப்பில் 175ற்கு மேற்பட்டவர்கள் ஆலடி சந்திப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு தலையாட்டி முன் நிறுத்தப்பட்டனர்.

அவர்களில் 54 பேரை தலையாட்டியும் அடையாளப்படுத்தியது. அதில் எனது கணவரும். பின்னர் விசாரித்துவிட்டு விடுவதாக கூறி அழைத்துச் சென்றனர். எனது கணவருடன் கொண்டு செல்லப்பட்டவர்களில் 25 பேர் இன்றும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.

கண்கட்டி கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே எனது கணவரை இராணுவம் கொண்டு செல்லும் போது கண்டது தான் நான் கண்ட கடைசி நாள் என்று கதறினார்.

மேலும் தனது சகோதரன் மறவன்புவவில் வைத்து இராணவ சுற்றிவளைப்பில் துமிந்த தலைமையில் கைது செய்யப்பட்டார். இதுவரை எந்த தகவலும் இல்லை என்றும் சகோதரி ஒருவர் சாட்சியம் அளித்தார்.

எனினும் இன்றையதினம் 5 மேற்பட்ட சாட்சியங்கள் குறித்த துமிந்த என்ற இராணுவ அதிகாரிக்கு எதிராக இடம்பெற்றுள்ளது. எனினும் அன்றைய காலப்பகுதியில் 30 மேற்பட்டவர்கள் துமிந்த தலைமையில் காணாமல் போயிருந்ததாகவும் சாட்சியங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1996.7.19 அன்றே பெண் ஒருவர் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டு இன்று வரை எதுவித தகவலும் இல்லாத நிலையில் உள்ளனர்.

எனினும் இன்று கடந்த 1990 ஆம் ஆண்டிருந்து 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பிலேயே சாட்சியங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் அதிலும் 96 மற்றும் 2009 ஆண்டு காலப்பகுதியில் காணாமற் போனவர்கள் தொடர்பிலேயே அதிக சாட்சியப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

எனினும் இந்த விசாரணைக்கு வருகைதந்தவர்களில் பலர் தமது பிள்ளைகள் , கணவன் , சகோதரன் என இராணுவமே கைது சென்று சென்றது என இராணுவத்தினருக்கு எதிராகவே தமது சாட்சியங்களையளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவர் இரகசிய சாட்சியம்

இன்று நடைபெற்ற காணாமற் போனவர்கள் தொடர்பான சாட்சியப்பதிவுகளை வழங்க வந்தவர்களில் இருவர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் முன் இரகசிய சாட்சியம் அளித்தனர்.

அதன்படி மேல்முறையீட்டு நீதிமன்றில் காணாமல் போனவர் தொடர்பில் ஆட்கொணர்வு முறைப்பாட்டினை பதிவு செய்ய உள்ளநிலையில் பகிரங்கமாக சாட்சியம் அளிப்பதற்கு குறித்த இருவரும் மறுப்புத் தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த முறைப்பாட்டில் எதிர்மனுதாரராக சட்டமா அதிபர் திணைக்களத்தை குறிப்பிட வேண்டியுள்ளமையினால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகள் முன் சாட்சியங்களை வழங்குவதுதற்கு விருப்பம் தெரிவிக்காமையின் அடிப்படையில் குறித்த பதிவேட்டு அறையில் இருந்து சட்டத்தரணிகள் வெளியேற்றப்பட்டு ஒலி வாங்கிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு ஆணைக்குழுவின் தலைவர் முன்னிலையில் சாட்சியப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 107 விண்ணப்பங்கள்

சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பகுதிகளில் இருந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் 107 புதிய விண்ணப்பங்கள் இன்று கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.

10 கிராமசேவகர் பிரிவில் இருந்து 59பேர் அழைக்கப்பட்டிருந்த வேளை மேலும் 170 பேர் புதிய விண்ணப்பங்களை இன்றைய ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளனர்.

எனினும் இவர்களுக்கான விசாரணைகள் விரைவில் நடாத்தப்படும் என்றும் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, நேற்று கோப்பாய் பிரதேச செயலகத்தில் மேற்கொள்ளப்பட்ட சாட்சியப்பதிவுகளில் 49 பேர் சாட்சியம் அளித்ததுடன் 93 பேர் புதிதாகவும் விண்ணங்களை ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளனர்.

Related Posts