Ad Widget

சாட்சியை அச்சுறுத்தும் கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள சுன்னாக பொலிசார்!!!

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நபர் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தொடர்பான சாட்சியம் ஒருவரை குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிஸ் சந்தேகநபர் ஒருவர் அச்சுறுத்துவதாக மல்லாகம் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

மல்லாகம் நீதிமன்றில் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் நகர்த்தல் பத்திரம் ஊடாக சட்டத்தரணி, சாட்சியம் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு சென்றார்

கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் திகதி ஐந்து இளைஞர்கள் மீது திருட்டுக்குற்றம் சுமத்தி சுன்னாக பொலிசார் கைது செய்து இருந்தனர். அது தொடர்பான வழக்கு விசாரணை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.

அந்நிலையில் கடந்த ஜூலை 25ம் திகதி குறித்த வழக்கு நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளபட்ட போது குற்றம் சுமத்தப்பட்ட இளைஞர்கள் மன்றில் ஆஜராகி இருந்தனர்.

அன்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது குற்றச்சாட்டப்பட்ட இளைஞர்கள் மன்றில், தம் மீது பொய்குற்றச்சாட்டு சுமத்தி சுன்னாக பொலிசார் கைது செய்தனர் எனவும், கைது செய்த பின்னர் தம்மை சுன்னாக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து அடித்து மின்சாரம் பாய்ச்சி சித்திரவதைக்கு உட்படுத்தியதாகவும், அதில் தம்முடன் கைதான சிறிஸ்கந்தராஜா சுமணன் எனும் நபர் சித்திரவதை காரணமாக உயிரிழந்ததாகவும், பரபரப்பு வாக்கு மூலம் அளித்தனர்.

உயிரிழந்த தமது நண்பனின் உடலை கிளிநொச்சி இரணைமடு குளத்தில் வீசி விட்டு தமது நண்பன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என பொலிசார் தெரிவித்ததாக நீதவானிடம் தெரிவித்தனர்.

அத்துடன் தம் மீது சித்திரவதை புரிந்த தம்மை கைது செய்தவர்கள் அப்போது சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த சிந்திக்க பண்டார என்பவர் தலைமையிலான மூன்று தமிழ் பொலிசார் உட்பட எட்டு பேரே என பொலிசாரின் பெயர் குறிப்பிட்டு மன்றில் வாக்கு மூலம் அளித்தனர்.

அதனை தொடர்ந்து மல்லாகம் நீதிவானால் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பொலிசாரையும் கைது செய்யுமாறு உத்தரவு இடப்பட்டது.

அதன் பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ம திகதி மீண்டும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதும் எட்டு பேரும் மன்றில் முன்னிலை ஆகவில்லை.

அன்றைய தினம் (ஆகஸ்ட் 26ம திகதி ) கொலை குற்றம் தொடர்பான வழக்கு விசாரணை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் பாரப்படுத்த படும் எனவும், சித்திரவதைக்கு எதிரான வழக்கு விசாரணை மேல் நீதிமன்றுக்கு பாரப்படுத்த படும் சட்டமா அதிபர் திணைக்களம் மல்லாகம் நீதிமன்றுக்கு அறிவித்து இருந்தது.

அதன் பிரகாரம் கடந்த புதன்கிழமை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எட்டு பேரும் மன்றில் முன்னிலை ஆகவில்லை அதனை அடுத்து கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிவான் எட்டு பேரையும் கைது செய்ய உத்தரவு இட்டு இருந்தார்.

அந்நிலையில் கடந்த வியாழக்கிழமை எட்டு பேருக்கும் எதிரான சித்திரவதைக் குற்றசாட்டு தொடர்பான வழக்கு விசாரணைக்கு எட்டு பேருக்கும் மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்து இருந்தது. இருந்த போதிலும் அவர்கள் மன்றில் ஆஜராகவில்லை அதனை தொடர்ந்து வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ம திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேல் நீதிமன்றில் சந்தேக நபர்களான பொலிசார் மன்றில் முன்னிலையாகமைக்கான காரணம், குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸ் அதிகாரியினால் எதிரிகளுக்கான நீதிமன்றத்தின் அழைப்பாணைகளை உரியவர்களிடம் சேர்ப்பிக்க முடியவில்லை. எனவே, மீண்டும் அவர்களுக்கு அழைப்பாணை பிறப்பித்து ஒரு தவணை தரவேண்டும் என மன்றில் குற்ற புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த வழக்கின் சாட்சியங்களில் ஒருவர், குற்றம் சாட்டப்பட்ட பொலிசாரில் ஒருவர் தற்போதும் சுன்னாக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருவதாகவும், அவர் தினமும் தன்னை பின் தொடர்ந்து மிக அருகில் வந்து மோட்டார் சைக்கிளை முறுக்கி சத்தம் எழுப்பி தன்னை பயமுறுத்தும் விதமாக செயற்படுவதாகவும், தன்னை மோட்டார் சைக்கிளில் பயமுறுத்த வரும் போது ஒரு பை ஒன்றினையும் எடுத்து வருவதாகவும், தனது பிள்ளைகளை தனியார் வகுப்புகளுக்கு அழைத்து செல்லும் போது பின் தொடர்வதாகவும் சட்டத்தரணி ஊடாக நேற்றய தினம் செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவானின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

மல்லாகம் நீதிமன்றம் நீதிவான், மற்றும் கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் ஆகியோர் எட்டு பேரையும் கைது செய்ய உத்தரவு பிறப்பித்து உள்ள போதிலும் இதுவரையில் குற்றம் சாட்டப்பட்ட பொலிசார் எவரும் கைது செய்யப்படவில்லை.

அவர்கள் அனைவரும் பொலிஸ் சேவையில் தொடர்ந்து கடமையாற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts