Ad Widget

சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்க ஐ.தே.க. தீர்மானம்!

நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணான வகையில் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதென்றும், அதற்கெதிராக சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.

அதன் பிரகாரம் எதிர்வரும் 24ஆம் திகதி கண்டியிலும், 27ஆம் திகதி களுத்துறையிலும், டிசம்பர் 3ஆம் திகதி கொழும்பிலும், டிசம்பர் 4ஆம் திகதி கிரிபத்கொடயிலும் உண்ணாவிரத போராட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அரசாங்கம் ஒன்று இல்லையென்றும், அதனால் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களுக்கான செலவீனங்களை அங்கீகரித்த அதிகாரிகளும் பதில்கூற வேண்டிவரும் என்றும் அகிலவிராஜ் காரியவசம் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் பிரதமர் மாற்றம் ஏற்பட்ட பின்னர் ஜனாதிபதி மைத்திரியால் புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது. எனினும், பெரும்பான்மையற்ற ஒரு தரப்பை அரசாங்கமாக ஏற்றுக்கொள்ள முடியாதென குறிப்பிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, ஏற்கனவே பல ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts