Ad Widget

சவுக்குகாட்டை சுற்றுலா தலமாக மாற்றுவதற்கு நடவடிக்கை

மணற்காடு சவுக்குகாட்டை சுற்றுலா இடமாக மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என யாழ். மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

உலக பூமி தினத்தை முன்னிட்டு வடமராட்சி, மணற்காடு சவுக்குகாட்டை பாதுகாப்பதற்கு விசேட செயற்றிட்டம் ஒன்று 1,500 தொண்டர்களின் உதவியுடன் வெள்ளிக்கிழமை (22) முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட வடமராட்சி கிழக்கிலுள்ள பொது அமைப்பின் பிரதிநிதி ஒருவர் உரையாற்றும்போது,

‘மணற்காட்டிலுள்ள சவுக்கு காடு வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு பெரும் கொடையாகும். இந்தப் பிரதேசத்தை மண் அரிப்பில் இருந்து பாதுகாப்பதற்காக இந்தக் காடு உருவாக்கப்பட்டது. இதை தொடர்ந்தும் பாதுகாக்கும் அதேவேளை, இதனை உல்லாசப் பயணிகள் பார்வையிடுவதற்கான சுற்றுலா ஏற்பாடுகள் செய்து தரப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்காக, இந்தக் காட்டினுள் நன்னீர்க் கிணறு, மலசலகூடம், போக்குவரத்துப் பாதைகள் என்பன அமைக்கப்படவேண்டும’ என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் போதே மாவட்டச் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்தக் காட்டை உல்லாசப் பயணிகள் பார்வைடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். இந்தக் காடு இதுவரை 17 தடவைகள் எரியூட்டப்பட்டிருக்கின்ற நிலையில் இந்த தீயை அணைத்து இதனைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் நன்றி’ என தெரிவித்தார்.

மணற்காட்டில் தற்போது சுமார் 500 ஏக்கரில் சவுக்கு காடு அமைந்துள்ளது. இதனைப் பாதுகாப்பதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குமாக இந்தச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இது விடுதலைப்புலிகளது கட்டுப்பாட்டின் கீழ் யாழ்ப்பாணம் இருந்த காலப்பகுதியினில் மணல் அரிப்பினை தடுக்க ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts