Ad Widget

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடமாகாண சபையில் பிரேரணை – எம்.கே.சிவாஜிங்கம்

sivajilingam_tna_mpதமிழின அழிப்பிற்கு பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடமாகாண சபையில் பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளதாகவும் இந்த பிரேரணையை வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திடம் சமர்ப்பித்துள்ளதாகவும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

‘தமிழ் மக்கள் மீதான இன அழிப்பிற்கு உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லை. உள்ளக பொறிமுறையை அடியோடு நாம் நிராகரிக்கின்றோம். இதனால்தான் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இன அழிப்புக்கு எதிராக மேற்படி விடயங்களை உள்ளடக்கியதான மூன்று பிரேரணைகளை வடமாகாண சபையின் அடுத்த கூட்டத் தொடரில் (27ஆம் திகதி) கொண்டு வந்து சர்வதேசத்திற்கு உண்மையானதும் உறுதியானதுமான எமது நிலைப்பாட்டை தெரிவிக்கவுள்ளோம்.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இத் தீர்மானத்திற்கு அமைவாக எங்களுடைய நிலைப்பாட்டினைத் தெரிவிக்கும் வகையில் இந்தப் பிரேரணை அமையவுள்ளது.

அதாவது தமிழ்த் தேசத்தின் மீது நடத்தப்பட்டதும் நடத்தப்பட்டுக் கொண்டிருப்பதும் இலங்கை அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்கின்ற திட்டமிட்ட இன அழிப்பே என்பதனை அனைத்துலக சமூகத்திற்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இலங்கை அரசில் எமக்கு எள்ளளவும் நம்பிக்கை இல்லை என்பதுடன் எந்த விதமான உள்நாட்டுப் பொறி முறைகளும் எமக்கு நீதியையோ அல்லது அரசியல் தீர்வையோ ஒரு போதும் கொடுக்குமென்று நம்பவே இல்லை.

ஆகையால் அனைத்து உள்நாட்டுப் பொறிமுறைகளையும் அடியோடு நிராகரிப்பதுடன் இறுதியாக எமது மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மானிடத்துர்க்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவற்றை விசாரணை செய்வதற்காக பக்கச்சார்பற்ற பண்ணாட்டு விசாரணையை ஐக்கிய நாடுகள் சபையின் துணையுடன் உருவாக்குவதற்கு அனைத்துலக சமூகத்தினையும் நாம் வேண்டி நிற்கின்றோம்.

இதனடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கும், தீர்வு கிடைப்பதற்கும் வாய்ப்பாக அமைவதுடன் இலங்கை அரசாங்கத்திற்கு தண்டனை கிடைப்பதும் ஈழத்தமிழர் வாழ்வில் மிக முக்கியமான விடயமாகவே கருதப்படுகிறது’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts