Ad Widget

சர்வதேச மத்தியஸ்தத்தை நேரடியாகக் கோரியுள்ளது பரணகம ஆணைக்குழு! – பரிந்துரைகள் பாரதூரமானவை என்கிறார் ராஜித

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தையும் தாண்டி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நியமித்த மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் பாரதூரமானதாக அமைந்துள்ளன என்று அமைச்சரவை பிரதிப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பரணமக ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு எல்லோரும் கோஷம் எழுப்பி வந்தனர். பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளையும் தாண்டிய விசாரணைகளை பரணகம ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தமை, இசைப்பிரியா, புலித்தேவன், சார்ள்ஸ் அன்ரனி உள்ளிட்டவர்களின் மரணங்களுக்கு முறையான விசாரணை தேவை, சனல் 4 தொலைக்காட்சியின் காணொளிகள் நம்பகத் தன்மையுடையது, உண்மைகளைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்ட சர்வதேச நீதிபதிகளின் ஒத்துழைப்பு அவசியம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பரணம ஆணைக்குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

சர்வதேச விசாரணை, கலப்பு விசாரணை என்பவற்றிலிருந்து நாங்கள் உள்ளக தேசிய விசாரணைக்கு வந்துள்ளோம்.

ஐ.நா. தீர்மானத்தில் 20ஆவது பந்தியில் இலங்கையின் இணக்கப்பாட்டுடனேயே சர்வதேச விசாரணையாளர்கள் இடம்பெறுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், முன்னாள் ஜனாதிபதி நியமித்த பரணகம ஆணைக்குழு நேரடியாக சர்வதேச மத்தியஸ்தத்தைக் கோரியுள்ளது.

ஐ.நா. தீர்மானத்தையும் தாண்டிய பாராதூரமான விடயங்கள் பரணகம ஆணைக்குழுவில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது” – என்றார்.

Related Posts