Ad Widget

சர்வதேச நெருக்குதல்கள் மூலமாகவே உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும்

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சர்வதேச நிறுவனங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்குதல்களை கொடுப்பதன் மூலமே தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மக்களின் பிரச்சினைகளை இதுவரை காலமும் அரசாங்கத்திற்கு எடுத்துக்கூறி வந்தும் உரிய நிவாரணங்கள் கிடைக்கப்பெறவில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக வடக்கின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைவர் சலில் செட்டி, இன்று (புதன்கிழமை) காலை முதலமைச்சர் விக்னேஸ்வரனை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்தார். இதன்போதே தாம் மேற்குறித்த விடயத்தை குறிப்பிட்டதாக வடக்கு முதல்வர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அத்தோடு, கடந்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடு ஆகியவற்றையும் எடுத்துரைத்ததாகவும் முதலமைச்சர் கூறினார்.

அந்தவகையில், இலங்கை அரசாங்கம் தனது கடப்பாட்டில் இருந்து விடுபட முடியாது என்றும் அதிலிருந்து விடுபட்டுச் செல்ல இடமளிக்கமாட்டோம் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைவர் கூறியதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

அத்தோடு, ஐ.நா. பிரேரணையில் காணப்படும் விடயங்களை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும் என்பதோடு, அதனை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைவர் கூறியதாக வடக்கு முதல்வர் மேலும் தெரிவித்தார்.

Related Posts