இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளின் தலையீடுகளுடன் விசாரணை மேற்கொள்ளப்படுவது அவசியம் என்பதில் மாற்று கருத்து இல்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையை மேற்கொள்வதற்கு அரசமைப்பில் எந்தவித தடையும் இல்லை எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கொழுப்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு அரசமைப்பில் இடமில்லை என குறிப்பிட்டிருந்தார்.
உள்ளக பொறிமுறையின் ஊடகவே யுத்தக்குற்ற விசாரணைகள் இடம்பெறும் எனவும் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலே சர்வதேச நீதிபதிகளின் தலையீடு அவசியம் என்பதில் மாற்று கருத்திற்கு இடமில்லை என கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையை மேற்கொள்ளவதற்கு அரசமைப்பில் தடையிருப்பின் அந்த தடையை நீக்கி விசாரணையை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.