Ad Widget

சர்வதேச நீதிகேட்டு நல்லூரில் நாளை பேரணி; அனைவரையும் அணிதிரள பல்கலை. மாணவர் ஒன்றியம் அழைப்பு!!

சர்வதேச நீதி கோரி நல்லூரில் நாளை புதன்கிழமை இடம்பெறும் பேரணிக்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்புவிடுத்துள்ளது.

இதுதொடர்பில் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இந்நாட்டின் பூர்வீக குடிகள் ஆகிய நாம் எமது இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புக்கு நீதி வேண்டியும் எமது உரிமைகளை பெற்றிடவும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றோம்.

இந்தநிலையில் கடந்த பெப்ரவரி 22ஆம் திகதி ஆரம்பமான ஐ. நா. மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் எமது முக்கிய கோரிக்கைகளான

1.இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும்

2.தமிழர்களுடைய மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம், சுயாட்சி உரிமை போன்ற தமிழ் மக்களின் நீண்டகால அடிப்படை உரிமைக் கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

ஜனவரி 15ஆம் திகதி தமிழ்த் தேசிய கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளால் ஒன்றிணைந்து ஒப்பமிட்டு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையில் உள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைந்து சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தை நல்லூரில் ஆரம்பித்திருந்தோம். இப் போராட்டம் மதத்தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், இளையோர்கள், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என அனைவருடைய ஆதரவோடு தொடர்ச்சியாக மக்கள் போராட்டமாக இடம்பெற்று வருகின்றது.

உலகெங்கிலும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் தமிழர்களுடைய அறவழிப் போராட்டங்களுக்கு வலுசேர்க்கும் முகமாகவும் எமது கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தின் தொடர்ச்சியாக நாளை 17ஆம் திகதி புதன்கிழமை கிட்டு பூங்காவில் இருந்து நல்லூர் உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் திடல் வரை மக்கள் போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

ஆகவே தமிழ் மக்களின் நீதி மற்றும் உரிமைகளுக்கான இப் போராட்டத்திற்கு வலு சேர்த்து மதத் தலைவர்கள், தமிழ்த் தேசிய கட்சிகள் , சிவில் சமூக அமைப்புகள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினருடையஆதரவை கோரி நிற்கின்றோம் அந்த அடிப்படையில் உங்களுடைய ஆதரவையும் கோரி நிற்கின்றோம்.
நன்றி

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

Related Posts