Ad Widget

சர்வதேச நிலைப்பாட்டை தமிழர்களுக்கு சாதகமாக மாற்றியமைத்தோம்! – சுமந்திரன்

வெறுமனே அரசியல் தலைமைத்துவத்தை கொடுத்து பார்வையாளராக நாடாளுமன்றத்தில் நாம் அமர்ந்திருக்கவில்லை. நாடாளுமன்றத்திலேயும், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும், சர்வதேசத்திலும் இராஜதந்திர அணுகு முறையை மேற்கொண்டு, 2009இல் தமிழ் மக்கள் உரிமைப் போர் தொடர்பில் இருந்த நிலையை முற்றாக மாற்றி சர்வதேச நிலைப்பாட்டை தமிழர்களுக்கு சாதகமாக மாற்றியமைத்தோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நீர்வேலி கந்தசாமி கோயிலடியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழர்களுக்கு எதிர்காலம் இருக்கின்றதா என்று 2009இல் கேள்வி இருந்த பொழுது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுதான் கடந்த 6 ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமைத்துவத்தை கொடுத்தது.

யுத்தம் முடிவடைந்த பொழுது ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசை பாராட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் நாம் மேற்கொண்ட மென்வலு அணுகுமுறைகள் காரணமாக இரண்டு வருடங்களிலேயே இலங்கையை கேள்வி கேட்கின்ற தீர்மானத்தை அதே ஐக்கிய நாடுகள் சபையிலேயே நிறைவேற்ற வைத்தோம், அத்துடன் கடந்த வருடம் ஒரு சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடும் நிலையை உருவாக்கினோம்.

இது குறித்து பல்வேறு பொய்யுரைகள் இந்த தேர்தல் காலத்தில், தேர்தலை மட்டும் மையமாக வைத்து பரப்பப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. நாங்கள் சர்வதேச விசாரணையை கைவிட்டுவிட்டோமாம், கேட்கவே வேதனையாக இருக்கின்றது. எழுத்தாலும், வாய்மூலமாகவும், இராஜதந்திர நடவடிக்கைகளாலும், பல தலைநகரங்களுக்கு நேரடியாக சென்றும், தூதுவர்களை சந்தித்தும், அதன் மூலம் பல திருத்தங்களைக் கூட கொண்டுவர வைத்து ஒரு உயர்ந்த சர்வதேச விசாரணை தீர்மானத்திற்கு வழியமைத்தவர்கள் நாங்கள்.

சனல் 4 இன் கெலும் மெக்ரே மூலம் கசிந்ததாக கூறி, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உள்ளக பொறிமுறை விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும், அதற்கு நாம் உடன்பட்டுள்ளதாகவும் வதந்திகளை பரப்புகின்றார்கள். நியூயோர்க்கிலே இருக்கும் ஐ.நா பொருளாதார மன்றத்திற்கும், ஜெனிவாவிலே செயல்படும் மனித உரிமைகள் பேரவைக்கும் இடையிலான வித்தியாசம் தமிழ் மக்களுக்கு தெரியாது என்று நினைத்துக் கொண்டு தேர்தல் காலத்தில் கதைகளை சொல்லித் திரிகின்றார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts