Ad Widget

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நாட்படினது பல மாவட்டங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றன.

முல்லைத்தீவு நகரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், சிவனேசன், ரவிகரன், புவனேஸ்வரன் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் பங்கு கொண்டிருந்தனர்.

நகர மத்தியில் இருந்து மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம் நடைபெறும் இடம் வரை ஊர்வலமாக வந்த மக்கள் மேற்படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கவன ஈர்ப்பு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமான குறித்த ஊர்வலம் ஏ 9 வீதி ஊடாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை செனறு அங்கு அமைதியான முறையில் அவர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிட தக்கதாகும்.
இதேவேளை வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா பேரூந்து நிலையம் முன்பாக காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.

குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏ9 வீதி வழியாகச் சென்று 188 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம் மேற்கொள்ளப்படும் இடத்திற்குச் சென்றிருந்தனர். இதனையடுத்து பேரணி அங்கிருந்து வவுனியா நகரசபை மண்டபத்தை வந்தடைந்தனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்று புதன் கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடும் குடும்பங்களின் சங்கம் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு ஆகியவை இணைந்து மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இருந்து ஆரம்பமாகிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கவனயீர்ப்பு ஊர்வலம் மன்னார் பொது வைத்தியசாலை வீதியூடாக மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது.

அதனைத் தொடர்ந்து மன்னார் பஸார் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவினர்களினால் அமைதி போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன், ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் , மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பி.ஏ.அந்தோனி மார்க் மற்றும் அருட்தந்தை ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts