Ad Widget

சர்வதேச உதவியுடன் இந்த வருடமே தீர்வு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

SURESH2014 ஆம் ஆண்டில் சர்வதேச மத்தியஸ்தத்துடன் தமிழருக்குத் தீர்வு கிடைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சர்வதேச விசாரணை மூலம் அரச படைகளின் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், காணாமற்போனோரின் உறவுகளுக்கும், சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கும் நீதி கிடைக்கும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ்பிரேமச்சந்திரன் தெரிவித்தவை வருமாறு:

முப்பது வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்த தமிழரின் ஆயுதப் போராட்டம் 2009 இல் முள்ளிவாய்க்காலுடன் மெளனித்தது. இதன் பின்னர் ஈழத்தமிழர்கள் அநாதைகள் என்ற நினைப்பில் இலங்கை அரசு செயற்பட்டு வருகின்றது.

எனினும், தமிழரின் பிரச்சினையையும், அவர்களின் நியாயமான கோரிக்கையையும், அவர்களின் போராட்டத்தின் உண்மைத் தன்மையையும் சர்வதேச சமூகம் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நன்றாக உணர்ந்துவிட்டது.

இதன் பிரகாரமாகத்தான் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசுக்கு எதிராக இரண்டு தீர்மானங்கள் கடந்த 2012, 2013 ஆம் ஆண்டுகளில் சர்வதேச நாடுகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சர்வதேச சமூகத்தின் அறிவுரைகளைக் கேட்காமல் இலங்கை அரசு தன்னிச்சையாக செயற்பட்டு வருவதால் அதற்கு எதிராக மூன்றாவது பிரேரணையையும் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நிறைவேற்ற உலக நாடுகள் தீர்மானித்துள்ளன.

இந்தப் பிரேரணை மிகக் கடுமையான பிரேரணையாக – சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் பிரேரணையாக இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மட்டுமல்ல உள்நாட்டில், வெளிநாடுகளில் உள்ள பல தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர்.

அத்துடன் இது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளிடம் பல வழிகளில் அழுத்தங்களையும் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தீர்வுக்கான நல்ல சூழல் அமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னாலான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் – என்றார்.

Related Posts