Ad Widget

சர்வதேச அஞ்சல் தினம் இன்று

தபால் சேவைக்கென உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற தினமான உலக அஞ்சல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 9 ஆம் திகதி உலக அளவில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

world_post_day_logo

எத்தனையே புதிய தொழில் நுட்ப தொடர்பு சாதனங்களின் வருகையினால் அடித்துச்செல்லப்படாமல் தொடர்ந்து மக்களின் நம்பகத் தன்மையுடன் நிலைத்து நிற்கும் துறை இந்த தபால் துறை மட்டுமே என சொல்லமுடியும்.

அதாவது 1874 க்கு முன்பே மக்களுக்கு கடிதங்களையும் விரைவு செய்திகளையும் (தந்தி) பொதிகளையும் காவிச் சென்று கையளித்த அதேசேவை இன்றும் எவ்வித மாற்றமும் காணாத நிலை தொடர்ந்து வருவது ஆச்சரியமான விடயம் தான்.

மேலும், சர்வதேச அஞ்சல்தினம் 1874 ல் பிரகடனப்படுத்தப்பட்டது. இலங்கையில் 1857 இல் முதன்முதல் தபால் தலைவெளியிடப்பட்டிருப்பதுடன் தந்திச்சேவையானது 1858 இல் நடைமுறைக்கு வந்துள்ளது. இலங்கை அரச இயந்திரத்தின் கீழ் செயற்பட்டு வந்த தபால் சேவையானது 1982 ஆம் ஆண்டு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை உலக அஞ்சல் தினத்தினை அனுஷ்டிக்கும் விதமாக யாழ்ப்பாணம் பிரதான அஞ்சலகத்தில் 4 புதிய சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் என். ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

வடக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் என். ரட்ணசிங்கம் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன. அதன்படி பொதி சேவை( 50கிலோவிற்கு உட்பட்ட பொதிகள் உரிய இடங்களுக்கு கொண்டு சென்று வழங்கப்படும்) , தொலைபேசி கட்டணங்களை செலுத்துதல் ( மெபிட்டல் வாடிக்கையாளர்கள் மீள்நிரப்ப வேண்டுமாயின் வீட்டிற்கு வரும் தபால்காரரரிடம் மீள்நிரப்பல் மற்றும் மெபிட்டலின் மாதாந்த கட்டணத்தை செலுத்தி பற்றுச் சீட்டினைப் பெறல்) , சிற்றிலிங் தொலைபேசிகள் விற்பனையாளர் சேவை மற்றும் பரீட்சைக் கட்டணங்களை இணையத்தளங்களில் செலுத்துதல் போன்ற சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தொடர்ந்தும் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற போட்டிகளில் தெரிவு செய்யப்பட்ட சிறந்த அலுவலகங்கள், சிறந்த அஞ்சல் உத்தியோகத்தர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

மேலும் தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ளதுடன் அஞ்சல் தின நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

இந்த நிகழ்விற்கு அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் , ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி, யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், முப்படைகளின் தளபதிகள் மற்றும் உயரதிகாரிகள் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts