Ad Widget

சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சியை இலங்கை அரசு கைவிடவேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சியிலேயே இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. அந்த நிலை மாற்றப்படவேண்டும். சர்வதேச விசாரணையை மறுப்பதால் நாடும், அரசும் மேலும் நெருக்கடிகளையே எதிர்கொள்ளவேண்டிவரும். அதனை புரிந்துகொண்டு அரசு நடந்துகொள்ளவேண்டும்.

suresh

இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன். யாழ். நீர்வேலியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஏற்பாட்டில் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச விசாரணையை நாம் வரவேற்கின்றோம். இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை இடம்பெறவேண்டும் என்று கூட்டமைப்பு பல சந்தர்ப்பங்களிலும் வலியுறுத்தி வந்திருக்கிறது.

போர் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையிலும் எந்தவித முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்கவில்லை. அதேவேளை, ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது அவருக்கும் பல்வேறு வாக்குறுதிகளை இலங்கை அரசு வழங்கியிருந்தது. அந்த வாக்குறுதிகளும் காற்றோடு பறந்துவிட்டன.

இவ்வாறு சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சியிலேயே இலங்கை அரசு ஈடுபட்டுவருகிறது. தற்போது சர்வதேச விசாரணையை நிராகரிக்கப்போவதாகவும் சாட்சியமளிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அரசு மிரட்டிவருகிறது. இவ்வாறான இழுத்தடிப்புக்களும் மிரட்டல்களும், தொடர்ந்து இக்கட்டான நிலைக்கே கொண்டுசெல்லும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்.- என்றார்.

தொடர்புடைய செய்தி

ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் மாநாடு

Related Posts