Ad Widget

சர்வதேசத்திடம் செல்லவேண்டிய நிலையை அரசாங்கமே உருவாக்கியது – த.தே.கூ

tna‘உள்நாட்டுப் பிரச்சினைக்கு தீர்வு தேடி சர்வதேசத்திடம் நாம் செல்லவில்லை. அவ்வாறு செல்ல வேண்டிய நிலைமையினை அரசாங்கமே தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு உருவாக்கிவிட்டது’ என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பீ.அரியநேத்திரன் தெரிவித்தார்.

‘2011ஆம் ஆண்டுக்குப் பின்னரிலிருந்து இதுவரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 18 தடவைகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இருப்பினும் எந்தவிட தீர்வும் எட்டப்படவில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு, திருப்பளுகாமம் இந்து கலாமன்றத்தின் 35ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ‘இலங்கை பிரச்சினையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏன் சர்வதேசத்துக்கு கொண்டு சென்றது என்றும் அவ்வாறு சர்வதேசத்திடம் செல்வதால் எவ்வித பயனும் கிட்டப்போவதில்லை என்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தெரிவித்து வருகின்றனர்’ என்று குறிப்பிட்டார்.

‘நாம், தீர்வு தேடி சர்வதேசத்திடம் போகவில்லை. அவ்வாறு போக வேண்டிய நிலைமையை அரசாங்கமே தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு உருவாக்கிவிட்டது’ என்றும் அவர் கூறினார்.

‘இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக கடந்த 2010ஆம் ஆண்டிற்கு பின்னர் அரசாங்கத்துடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. குறிப்பாக 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுவரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 18 தடவைகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

இந்த சந்திப்புக்களில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் ஐயா தலைமையில் கூட்டமைப்பிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட 14 பேரில் பலரும் கலந்துகொண்டுள்ளனர். இருப்பினும், இந்த பிரச்சினைக்கு இதுவரையில் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. அதனாலேயே சர்வதேசத்திடம் செல்ல வேண்டிய நிலை உருவாகியது’ என்று அரியநேத்திரன் எம்.பி மேலும் கூறினார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா கருத்து தெரிவிக்கையில், ‘நாங்கள் கேட்பது அதிகாரப் பரவலாக்களே தவிர வேறு எதனையும் நாம் கேட்கவில்லை. போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நான்கு வருடங்கள் கடந்த நிலையிலும் அரசாங்கம் இன்னமும் தீர்வு பெற்றுக்கொடுக்காமல் காலத்தை இழுத்தடித்துக்கொண்டே இருக்கின்றது’ என்றார்.

Related Posts