Ad Widget

சர்ச்சைக்குரிய சிங்கக்கொடி விவகாரம்: நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார் டலஸ்!

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது சர்ச்சைக்குரிய சிங்கக்கொடியை கையில் வைத்திருந்தமைக்கு முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.

dalas 6565s

அத்துடன், இனிவரும் காலங்களில் இதுபோன்ற கொடியைப் பயன்படுத்துவதற்கு எவருக்கும் இடமளிக்கமாட்டோம் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

இந்தச் செயலானது சிறுபான்மை மக்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்து வகையில் அமைந்திருந்தால் அதற்காக கவலை வெளிடுகிறார் எனவும் தெரிவித்தார். நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே மேற்கண்டவாறு மன்னிப்புக் கோரி கவலை வெளியிட்ட அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு:-

தேசியக் கொடியைப் போன்ற கொடியொன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கைகளில் ஏந்தியிருந்தனர். இது ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த தரப்பினரால் கொண்டுவரப்பட்ட கொடி அல்ல. ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றால் இனந்தெரியாதவர்கள் அதில் கலந்துகொள்வர். அவர்கள்தான் இந்தக் கொடி கொண்டுவந்திருக்கப்படவேண்டும்.

எது எவ்வாறிருப்பினும், இனிவரும் காலங்களில் இந்தக் கொடியைப் பயன்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டோம் – என்றார். மேலும், ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறும் சந்தர்ப்பத்தில் தேசியக் கொடியொன்றை வழங்கினால், அதில் வர்ணம் இருக்கிறதா? அல்ல வேறேதும் இருக்கிறதா என்று எவரும் பார்ப்பதில்லை. அதுபோலவே நாம் அந்தக் கொடியைப் பிடித்ததும் தற்செயலாக இடம்பெற்றதாகும்.

இந்தச் சம்பவத்துக்காக நாட்டு மக்களிடம் நான் பகிரங்கமாக மன்னிப்புக் கோருகின்றேன். அத்துடன், சிறுபான்மையினருக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விதத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தால், அதற்கு கவலையையும் தெரிவித்துக்கொள்கின்றேன் – என்றார்.

இதேவேளை – நாட்டின் தேசியக் கொடி தனது தலைமையில் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாற்றியமைக்கப்பட்டு (தனி சிங்கக்கொடியாக) காட்சிப்படுத்தப்பட்டமை குறித்து தான் கவலையடைகிறார் என புதிய ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பிலவும் தெரிவித்துள்ளார்.

Related Posts