Ad Widget

சரத் பொன்சேகாவைப் புகழ்ந்த வடக்கு முதல்வர்!

சரத் பொன்சேகா தனது சுயநலனுக்காகவே அனைத்துலக விசாரணைக்கு ஆதரவளித்துள்ளார். இவர் முன்னைய அரசாங்கத்தில் இராணுவ நீதிமன்றால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதற்குப் பழிதீர்க்கும் முகமாகவே அனைத்துலக விசாரணைக்கான ஆதரவை வழங்கியுள்ளார்.

இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் Manekshaw எழுதியுள்ள பத்தியில் குறிப்பிட்டுள்ளார். இதனை மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் ஆற்றிய கன்னி உரையின் போது, அனைத்துலக தலையீட்டுடனேயே போர்க் குற்றங்கள் மீதான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்ததை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பாராட்டியுள்ளார்.

இதுமட்டுமல்லாது, சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் நிறைவில் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் அடங்கிய பல நூறு போராளிகள் கொல்லப்பட்ட ‘வெள்ளைக் கொடி’ விவகாரம் தொடர்பாக விசாரணை நடாத்தப்பட வேண்டும் எனவும் பீல்ட் மார்சல் அழைப்பு விடுத்துள்ளார்.

2010 அதிபர் தேர்தலில் போட்டியிட்ட பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தற்போது பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் என்ற பதவியுடன் சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

ஜெனரல் டக்ளஸ் மக் ஆர்தர் மற்றும் பிரித்தானியாவின் பீல்ட் மார்சல் மொன்ரகொமெறி ஆகியோர் பங்கெடுத்த இரண்டாம் உலக யுத்தமானது வெற்றிகரமாக முடிவிற்குக் கொண்டு வரப்பட்ட பின்னர், ‘ஐக்’ என நன்கு அறியப்பட்ட அமெரிக்க ஜெனரல் ட்வைட் ஐசனோவர் என்பவர் 1953ல் அமெரிக்காவில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமெரிக்காவின் 34வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் 1961 வரை அமெரிக்க அதிபராகப் பதவி வகித்தார். ட்வைட் ஐசனோவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு இரண்டு காரணங்கள் மிக முக்கியமானவையாகும். அதாவது இரண்டாம் உலக யுத்தம் மற்றும் அடல்ப் ஹிட்லர் ஆகிய இரண்டையும் வெற்றி கொள்வதற்காக ஐசனோவர் தனது தலைமைத்துவத்தை வழங்கினார் என்பதற்கு நன்றி பாராட்டியே அமெரிக்கர்களால் இவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2010ல் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது, இவர் ‘ஐக்’ என ஊடகங்களால் விபரிக்கப்பட்டார். அதாவது மூன்று பத்தாண்டுகளாக இலங்கைத் தீவில் நிலைத்திருந்த யுத்தத்தை வெற்றிகரமாக வெற்றி கொண்டதன் பின்னர் சரத் பொன்சேகா அதிபர் தேர்தலில் போட்டியிட்டமையால் ஊடக வட்டங்களில் இவர் ‘ஐக்’ எனப் போற்றப்பட்டார்.

வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் பிரசன்னத்தைக் குறைக்க வேண்டும் எனப் பொதுவாகத் தனது பேச்சுக்களில் கடின தொனியில் வலியுறுத்தும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கடந்த வாரம் வலிகாமம் வடக்கைச் சொந்த இடமாகக் கொண்டுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான நிலச் சான்றுகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது நாடாளுமன்றில் சரத் பொன்சேகா ஆற்றிய உரை தொடர்பாகத் தான் பெருமை கொள்வதாக அறிவித்தார்.

2010ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் மகிந்த ராஜபக்ச பெற்றுக் கொண்ட வாக்குகளை விட சரத் பொன்சேகா பெற்றுக் கொண்ட வாக்குகள் மிகவும் அதிகமாகக் காணப்பட்டதாக விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்படுவதை எதிர்க்காது இதனை சரத் பொன்சேகா ஆதரித்ததன் மூலம் உண்மையில் தான் ஒரு இராணுவ வீரன் என்பதை நிரூபித்துள்ளதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார். பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தனது தொழிற்பண்பை உறுதிப்படுத்தியிருந்தார். இதனாலேயே மக்கள் 2010 இடம்பெற்ற அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்து வாக்களித்திருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கும் மேலாக, புலிகளின் தலையீட்டால் 2005ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலைப் பகிஸ்கரித்த வடக்கு மாகாண மக்கள் இதே தவறை 2010 தேர்தலிலும் இழைக்க விரும்பவில்லை. இதனால் இவர்கள் 2010ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்து வாக்களித்தனர்.

இதன் பின்னர் 2015ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்த இந்த வாக்காளர்கள் மைத்திரிபால சிறிசேனவை நாட்டின் அதிபராக நியமித்தனர். சிறிலங்காவின் உச்சநீதிமன்றில் நீதிபதியாகப் பதவி வகித்த விக்னேஸ்வரன், தனது பாடசாலைப் பருவத்தில் கொழும்பு றோயல் கல்லூரியின் இளவல் (கேடற்) படைப்பிரிவின் உறுப்பினராகச் செயற்பட்டிருந்தார். முதலமைச்சர் தனது பாடசாலைக் காலத்தை நிறைவு செய்த பின்னர் இளவற் படையணியின் உறுப்பினர் என்ற தகைமையுடன் சிறிலங்கா இராணுவத்தில் இணைந்திருந்தால் தற்போது அவர் ஒரு மூத்த அதிகாரியாக இருந்திருப்பார்.

பீல்ட் மார்சல் என்பது இராணுவத்தின் உயர்நிலையாகும். அனைத்துலக ரீதியில் மதிப்பளிக்கப்பட்ட பிரித்தானியாவின் பீல்ட் மார்சல் மொன்ரகொமறி மற்றும் இந்தியாவின் பீல்ட் மார்சல் சாம் மானெக்சா ஆகியோர் தமது தலைமைத்துவப் பண்புகளை வெளிப்படுத்தியதன் காரணமாகவே இராணுவ உயர் நிலைகளைப் பெற்றனர். பீல்ட் மார்சல் மொன்ரகொமறி இரண்டாம் உலக யுத்தத்தின் சிறந்த கதாநாயகர்களில் ஒருவராவார். இந்தியாவின் பீல்ட் மார்சல் மானெக்சா, 1970ல் இடம்பெற்ற இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தில் பாகிஸ்தானைத் தோற்கடிப்பதில் மிகப்பாரிய பங்காற்றியிருந்தார்.

ஆகவே பீல்ட் மார்சல்கள் தமது நாடுகளின் எதிரிகளுக்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்டு வெற்றியீட்டியதால் உலகப் புகழ்பெற்றனர். இதேபோன்று தனது நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை வெற்றிகரமாக முடிவிற்குக் கொண்டு வந்தவர் என்ற வகையில் பீல்ட் மார்சல் பட்டத்தைப் பெற்ற முதலாவது இராணுவத் தலைவராக சரத் பொன்சேகா விளங்குகிறார்.

போரின் போது இடம்பெற்றதாக நம்பப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்படுவதைத் தான் எதிர்க்கவில்லை என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தனது நாடாளுமன்றக் கன்னி உரையில் குறிப்பிட்டிருந்தார். தனது இராணுவத் தலைமைத்துவத்தின் கீழ் இடம்பெற்ற அனைத்து யுத்த நடவடிக்கைகளும் போர்ச்சட்டத்தின் பிரகாரமே மேற்கொள்ளப்பட்டதாகவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் சரத் பொன்சேகா தனது சுயநலனுக்காகவே அனைத்துலக விசாரணைக்கு ஆதரவளித்துள்ளார். அதாவது இவர் முன்னைய அரசாங்கத்தில் நிலவிய நீதி முறைமையின் கீழ் தண்டிக்கப்பட்டதுடன், இராணுவ நீதிமன்றாலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதற்குப் பழிதீர்க்கும் முகமாகவே சரத் பொன்சேகா தற்போது அனைத்துலக விசாரணைக்கான தனது ஆதரவை வழங்கியுள்ளார். அனைத்துலக விசாரணைக்குத் தனது ஆதரவை வழங்கியதோடு மட்டுமல்லாது குற்றவாளிகளை இனங்கண்டு அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக விசாரணைகள் தொடர்பான பீல்ட் மார்சல் பொன்சேகாவின் நிலைப்பாட்டை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புகழ்ந்துரைத்ததன் மூலம், தென்னிலங்கையில் உள்ள சரியாகச் சிந்திக்கின்ற மக்களின் கருத்துக்களை வரவேற்பதுடன், சமாதானம் மற்றும் மீளிணக்கப்பாடு ஆகியவற்றை நாட்டில் நிலைநிறுத்துவதற்கான தனது விருப்பத்தையும் இவர் வெளியிட்டுள்ளார்.

Related Posts