Ad Widget

சரத்பொன்சேகா மீது காட்டப்பட்ட பொது மன்னிப்பு அணுகுமுறையை ஏன் தமிழ் இளைஞர்கள் மீது காட்டக்கூடாது – சந்திரகுமார் எம்பி

அண்மையில் ஜனாதிபதி அவர்களினால் பொது மன்னிப்பு என்ற அடிப்படையில் நாட்டின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட எல்லா குற்றச்சாட்டுக்களிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார். அவரிடமிருந்து மீளப்பெறப்பட்ட பதவி நிலைகளெல்லாம் மீண்டும் வழங்கப்பட்டிருக்கின்றன.

அதேபோல, பிரதம நீதியரசர் அவர்களுக்கும் அவருடைய பதவி நிலை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த அணுகுமுறையை ஏன், எங்களது தமிழ் இளைஞர்கள்மீது காட்டக்கூடாது? என்பதை நான் இங்கே வலியுறுத்திக் கேட்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவருமான மு.சந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை(19) பாராளுமன்றில் நடைபெற்ற குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டமூலம் சம்பந்தமான விவாதத்தின்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் ஆற்றிய உரையின் முழு வடிவம் வருமாறு

கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே,

மாண்புமிகு நீதி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டமூலம் சம்பந்தமான விவாதத்திலே பேசுவதற்கு எனக்குச் சந்தர்ப்பம் கொடுத்தமைக்காக நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

இங்கே நான் முக்கியமானதொரு விடயத்தைப்பற்றி அதாவது நீண்டகாலமாக சிறைகளிலே தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகப் பேச விரும்புகின்றேன். சிறிய குற்றங்களுக்காக அல்லது சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் நீண்டகாலமாகச் சிறைகளிலே வாடுகின்ற பரிதாப நிலைமையைப் பற்றியும் அவர்களது விடுதலை தொடர்பாகவும் நாங்கள் எல்லோரும் இந்தச் சபையிலே பல தடவைகள் வலியுறுத்தியிருக்கிறோம். ஆனால், இன்னமும் அது நிறைவேற்றப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலைமையையே நாங்கள் பார்க்கின்றோம்.

கடந்த அரசின் ஆட்சிக்காலத்தில் தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளுக்குள் இருந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். அவர்களது அந்தப் போராட்டத்துக்கு நியாயம் வழங்குவதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. முன்னாள் நீதியமைச்சராக இருந்த, தற்போது இந்த அரசிலே அங்கம் வகிக்கின்ற அமைச்சர் அவர்கள்கூட இரண்டு வருடங்களுக்கு முன்பு, “விசேட நீதிமன்றங்களை உருவாக்கி, இவர்களது விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு விரைவாக விடுதலை செய்யப்படுவார்கள்” என்ற உத்தரவாதத்தை வழங்கியிருந்தார். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. இப்போதும் அவர்கள் அந்தச் சிறைகளிலே வாடுகின்றார்கள்.

சிறைகளிலே வாடும் தமிழ் இளைஞர்கள் – தமிழ் அரசியல் கைதிகள் மூன்று வகையாக இருக்கிறார்கள். ஒன்று, எதுவித விசாரணையுமின்றி நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள்; இரண்டாவது, நீண்டகாலமாக வழக்குகள் நடந்துகொண்டிருப்பவர்கள்; மூன்றாவது, சிறிய குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள். ஆனால், இந்தத் தண்டனையானது குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டது என்று இப்போது குறிப்பிடப்படுகின்றது.

இது இப்பொழுது விமர்சனத்துக்குள்ளாக்கப்படும் நிலைமையை நாங்கள் காண்கின்றோம். குற்ற ஒப்புதல் வாக்குமூலம் எப்படிப் பெறப்பட்டது? என்ன மாதிரியாக அந்த அணுகுமுறை பின்பற்றப்பட்டது? என்பவை தொடர்பாக பல விமர்சனங்களை இன்றும் பலருடைய பேச்சுக்களிலே அவதானித்தோம். ஆகவே, அந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் சரியானதா? என்பதை மீளாய்வு செய்ய வேண்டுமென்று நான் வலியுறுத்துகின்றேன்.

நீங்கள் இந்த விடயத்திலே துரிதமாக நடவடிக்கை எடுக்க முனைவதற்கு நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். அண்மையில் ஜனாதிபதி அவர்களினால் பொது மன்னிப்பு என்ற அடிப்படையில் இந்த நாட்டின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட எல்லா குற்றச்சாட்டுக்களிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார். அவரிடமிருந்து மீளப்பெறப்பட்ட பதவி நிலைகளெல்லாம் மீண்டும் வழங்கப்பட்டிருக்கின்றன. அதேபோல, பிரதம நீதியரசர் அவர்களுக்கும் அவருடைய பதவி நிலை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்த அணுகுமுறையை ஏன், எங்களது தமிழ் இளைஞர்கள்மீது காட்டக்கூடாது? என்பதை நான் இங்கே வலியுறுத்திக் கேட்கின்றேன். நாட்டின் ஜனாதிபதி அவர்கள் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த விடயத்தில் ஒரு மனிதாபிமான அணுகுமுறையைப் பின்பற்ற முன்வர வேண்டும் என்பதையும் நான் இவ்வவையிலே வலியுறுத்துகின்றேன்.
இதற்கு பதிலளித்த நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச !
ஐயா, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 182 பேர், சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மிக நீண்டகாலமாக சிறையில் உள்ளனர். இவர்களை நீதி மன்றுக்கு முற்படுத்த போதுமான சாட்சியங்கள் உள்ளனவா? என்பதைக் கண்டறிய தற்போது குழுவொன்றை நியமித்துள்ளோம். அவர்களில் குற்றச்சாட்டை நிரூபிக்கப் போதுமான சாட்சியங்கள் இல்லாவர்களை மேற்குறித்த குழுவின் அறிக்கை இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் கிடைக்கப்பெற்றவுடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்கள் அடுத்ததாக, கொலைகள் பற்றிய விடயம். கடந்த 30 ஆண்டுகளில் இந்த நாட்டிலே பல அரசியல் தலைவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அந்த வகையில் மிகப் பிரபல்யமான தென்னிலங்கையின் தலைவர்கள் அதாவது ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் என்று பலர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

அதுபோலவே தமிழ்த் தலைவர்களும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதாவது தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாகவிருந்த மூத்த தலைவர் அமிர்தலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா அற்புதராஜா, கிட்டிணன் சிவநேசன், என். ரவிராஜ், பீ. சந்திரநேரு, கே. தங்கத்துரை, சாம் தம்பிமுத்து ஆகியோர் உட்பட அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சிப் பொதுச் செயலாளர் குமார் பொன்னம்பலம் போன்ற பல முக்கிய அரசியல் பிரமுகர்களும் மகேஸ்வரி வேலாயுதம், பால நடராஜ ஐயர், பத்திரிகையாளர்களான நிமலராஜன், சிவராம் போன்ற பலரும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

ஆனால், இந்தக் கொலைகளுக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. அதாவது, குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை. இவற்றுக்குரிய விசாரணைகளையும் மீள ஆரம்பிக்க வேண்டுமென்று நான் இந்த அவையிலே வலியுறுத்த விரும்புகின்றேன்.

இன்னொரு முக்கியமான விடயத்தை நான் சொல்ல வேண்டும். அதாவது, பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்த திரு. மகேஸ்வரன் அவர்களது கொலையில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர், திரு. மகேஸ்வரன் அவர்களின் பாதுகாவலர்களால் சுடப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெறும்போது கைது செய்யப்பட்டார்.

இப்போது நீதிமன்றம் அவருக்குத் தண்டனை வழங்கியிருக்கின்றது. ஆனால், இந்தக் கொலைக்கான பழியை எமது கட்சியின்மீது சுமத்துகின்ற வகையில் அடிக்கடி பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள் என்பவற்றின்மூலம் செய்திகள் வெளியிடப்படுவதோடு, பாராளுமன்றத்திலும் அவ்வாறு பேசப்படுகின்றது.

ஒரு கொலைக் குற்றவாளிக்குத் தண்டனை வழங்கப்பட்ட பின்பு அது தொடர்பாக வேறொருவரை நோக்கி விரல் நீட்டிக் குற்றஞ்சாட்டுவது அந்த நீதிமன்றத்தை அவமதிப்பதாக இல்லையா? அல்லது அந்தக் கொலைக் குற்றவாளிமீது தண்டனை வழங்கப்பட்டது தவறு என்று சொல்லப்படுகின்றதா? அல்லது அது மீளாய்வு செய்யப்பட வேண்டுமா? இந்த விடயத்துக்குப் பதிலளிக்கப்பட வேண்டும். ஆகவே, இந்தக் கொலைக் குற்றம் தேவையில்லாமல் அரசியல் நோக்கத்துக்காக எம்மீது சுமத்தப்படுவதை நான் இந்த அவையிலே கண்டிக்கின்றேன். அதேநேரம் கொலைகள் நடந்திருக்கின்றன. அவ்வாறு எல்லா அரசியல் கொலைகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்று நாங்களும் சொல்கின்றோம் .

புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலே பேச்சுவார்த்தை நடைபெற்ற 2002 மற்றும் 2007ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது கட்சியின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இந்தக் கொலைகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. அந்த உறுப்பினர்களின் பிள்ளைகளும் அவர்களது மனைவிமாரும் இன்று மிகவும் துன்பத்தில் இருக்கின்றார்கள். இருந்தபோதிலும் இந்தக் கொலைகள் நியாயப்படுத்தப்படுகின்றனவா? அல்லது சம்பந்தப்பட்டவர்கள் அதனைக் கண்டும் காணாததுபோல் இருக்கின்றார்களா? என்பதை நான் இந்தச் சபையிலே கேட்க விரும்புகின்றேன்.

அடுத்ததாக, நீதி அமைச்சு தொடர்பாகவும் சில விடயங்களைச் சொல்ல வேண்டும். சந்தேகத்தின் பேரில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்படுபவர்கள் நீதிமன்றங்களில் நிறுத்தப்படும்போது அவர்களின் குற்றச்செயல்கள் எவ்வளவு பாரியதாக இருந்தாலும் அவர்கள் பிணையில் விடுவிக்கப்படும் நிகழ்வுகள் இன்று வடக்கிலே நடைபெறுகின்றன.

இது மிகவும் – அந்தச் சந்தேக நபர்களை உடனடியாகப் பிணையில் விடுவதற்கு என்ன காரணமென்று விசாரித்தபோது, அவர்களைச் சிறைகளிலே அடைப்பதற்கு அங்கு இடமில்லையென்று கருத்துச் சொல்லப்படுகின்றது. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது.

எனக்கு இங்கே பல விடயங்களைக் குறிப்பிட இருந்தாலும், நேரம் போதாததால் இன்னொரு முக்கியமான விடயத்தை மாத்திரம் கூறி, நான் முடித்துக்கொள்கின்றேன். கசிப்பு உற்பத்தி, மரக்கடத்தல், மணல் கடத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களைப் பாதுகாக்கின்ற அடிப்படையில் சட்டத்துறையில் தேறிய சட்டத்தரணிகள் செயற்படுகின்றனர். குற்றச் செயல்கள் புரிவோருக்கு இவர்கள் பக்கபலமாகவும் உறுதுணையாகவும் இருக்கின்ற துன்பகரமான நிலைமையை நாங்கள் காண்கின்றோம்.

சட்டத்தரணிகள் இந்தச் சமூகத்தில் முக்கியமானவர்கள். ஆகவே, குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களைப் பாதுகாக்கும் நடைமுறையிலிருந்து இவர்கள் மாற வேண்டும். குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கே அவர்கள் தங்களது சட்ட அறிவைப் பயன்படுத்த வேண்டும். அதைவிடுத்து, அவர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பது துரதிருஷ்டவசமானது.

இது குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுப்பது போல அமையும். எப்படியாவது தமது சட்டத்தரணிகளுக்கூடாக தங்களால் தப்பித்துக்கொள்ளலாம் என்ற மனநிலையையும் இது உருவாக்கும். ஆகவே, இந்த விடயத்தில் சட்டத்தரணிகளுக்கென சட்ட அறிவுக்கொள்கையொன்று உருவாக்கப்பட வேண்டும். அவர்கள் தங்கள் வரையறைக்குள்ளிருந்து தங்களது சட்ட அறிவைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதை நான் இங்கு வலியுறுத்துகின்றேன்.

இறுதியாக ஒரு விடயம். அமாலி சதுரிகா என்ற சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி பகிடிவதை காரணமாக மனமுடைந்து 16.02.2015ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆகவே, பகிடிவதை செய்பவர்களுக்குத் தண்டனை வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் சட்டமூலமொன்றைக் கொண்டுவர வேண்டும். இந்தப் பகிடிவதை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றதென்பதை கௌரவ நீதி மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் அவர்களுக்கு தெரிவிக்கின்றேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts